இந்த நிறுவனங்களில் முதலீடு செஞ்சு ஏமாறாதீங்க... டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்!!

By Narendran SFirst Published Aug 8, 2022, 12:05 AM IST
Highlights

அதிக வட்டி தருவதாக கூறும் மோசடியை நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். 

அதிக வட்டி தருவதாக கூறும் மோசடியை நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். கிண்டியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எல்.என்.எஸ் இண்டர்நேஷ்னல் பைனான்ஸ் சர்வீஸ் என்னும் நிறுவனம், கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக வேலூர் சத்துவாச்சாரி சேர்ந்த லட்சுமி நாராயணசுந்தரம் சுந்தரம் வேத நாராயணன், சுந்தரம் பக்தவச்சலம், சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கஜேந்திரன், ஈரோடு மூலப்பாளையத்தைச் சேர்ந்த விவேக் ஆகியோர் இருந்தனர். இவர்கள் பல்வேறு பெயர்களில் நிறுவனங்களை தொடங்கி பொதுமக்களிடமிருந்து முதலீடுகளை பெற்று வந்துள்ளனர். பொதுமக்களிடமிருந்து பிற முதலீடுகளுக்கு மாத வட்டியாக 6% முதல் 10 சதவீதம் வரை வழங்குவதாகவும் அறிவித்துள்ளனர். பொதுமக்களிடமிருந்து முதலீடுகளை பெறுவதற்காக இந்த கும்பல் பல்வேறு ஊர்களில் நட்சத்திர விடுதிகளில் கூட்டங்கள் நடத்தி பொதுமக்கள் நம்பு வகையில் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர். 

இதையும் படிங்க: கடனை அடைக்க எடுத்த முடிவு.. மனைவியை இன்சூரன்ஸ் எடுக்க சொல்லி கணவன் போட்ட ஸ்கெட்ச் !

முதலீடு செய்தவர்களின் பணத்தைக் கொண்டு அவர்களுக்கு மாத வட்டியை கொடுத்துள்ளனர். அடுத்தபடியாக முதலீடு செய்யும் பொதுமக்கள் பயன்படுத்தி முந்தைய முதலீடு செய்தவர்களுக்கு வட்டி வழங்கியுள்ளனர். சில மாதங்கள் மட்டுமே வட்டியை கொடுத்த இந்த நிறுவனங்கள் அதன் பிறகு வட்டியையும் கொடுக்கவில்லை முதலீட்டையும் திருப்பி தரவில்லை. பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோல் எல்.என்.எஸ் இண்டர்நேஷ்னல் பைனான்ஸ் சர்வீஸ் நிறுவனம் மற்றும் துணை நிறுவனங்களில் கடந்த ஆறாம் தேதி சென்னை உள்பட 21  இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் 247 ஆவணங்கள், 16 கணினிகள் 56 மடிக்கணினிகள், ஒரு டேப்லெட் 16 கைபேசிகள், 40 சவரன் தங்கம் ஒரு கார் மற்றும் ஒரு கோடியே 6 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டன. இதுவரை திரட்டப்பட்ட தகவலின் அடிப்படையில் சுமார் 79 ஆயிரம் பொதுமக்கள், இந்நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதும் அதன் மொத்த தொகை 4,383 கோடி ரூபாய் என்பதும் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: எனக்கு ஆண் குழந்தை வேணும்.. மனைவியை உயிரோடு கொளுத்திய கணவன் - பரபரப்பு சம்பவம்

இதே போல் சென்னையை தலைமை இடமாக கொண்ட ஆருத்ரா கோல்டு பிரைவேட் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் முதலீடுகளுக்கு 16 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் என அறிவித்து 1680 கோடி ரூபாய் முதலீடுகளை பெற்றுள்ளது. 89ஆயிரம் பேர் முதலீடு செய்துள்ளனர்.. இது தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அங்கீகாரம் பெற்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் மட்டுமே பொதுமக்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்யுமாறு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார். அதிக வட்டி தருவதாக கூறும் மோசடியை நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

click me!