
மடிப்பாக்கம் 188வது வட்ட திமுக செயலாளர் செல்வம் கொலை செய்யப்பட்டதற்கான காரணத்தை முக்கிய குற்றவாளியான முருகேசன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
திமுக வட்டச்செயலாளர் செல்வம் கொலை
திமுக வட்டச்செயலாளர் செல்வம் கடந்த பிப்ரவரி 1ம் தேதி அடையாளம் தெரியாத மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தீவிரமாக தேடி வந்தனர். மேலும், அவரது மனைவிக்கு மடிப்பாக்கம் பகுதியில் உள்ளாட்சித் தேர்தலில் சீட் ஒதுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அரசியல் ஆதாயத்திற்காக இந்தக் கொலை அரங்கேற்றப்பட்டதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க;- திமுக வட்டச்செயலாளர் செல்வம் கொலை வழக்கில் நீளும் மர்மம்.. அடுத்தடுத்து அரங்கேறும் பகீர் சம்பவங்கள்..!
கூலிப்படையினர் கைது
அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 3ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கூலிப்பரையைச் சேர்ந்த விக்னேஷ், புவனேஷ்வர், சஞ்சய், கிஷோர் உள்ளிட்ட 5 பேரை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து கூலிப்படையைச் சேர்ந்த மற்றொரு நபரான அருண் என்பவர் பிப்ரவரி 15ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். விசாரணையில் கிஷோர் என்பவர் மடிப்பாக்கம் செல்வத்தை கொலை செய்ய தங்களை வரவழைத்ததாகவும் கொலைக்கான காரணம் தங்களுக்கு தெரியாது எனவும் அருண் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
முக்கிய குற்றவாளி முருகேசன்
முக்கிய குற்றவாளியான கொளத்தூரை சேர்ந்த முருகேசனை கைது செய்தால் தான் கொலைக்கான காரணம் தெரியவரும் என்பவதால் தலைமறைவாக இருந்து வந்த அவரை கைது செய்யும் முயற்சியில் போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். இந்நிலையில், மார்ச் 14ம் தேதி அம்பத்தூரில் பதுங்கி இருந்த முருகேசனை துப்பாக்கி முனையில் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
பரபரப்பு வாக்குமூலம்
இந்நிலையில், முருகேசன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில்;- மடிப்பாக்கம் குபேரன் நகர் விரிவு பகுதியில் உள்ள 4 கிரவுண்ட் நிலத்தினை சொந்தம் கொண்டாடுவதில் திமுக பிரமுகர் செல்வத்திற்கும், மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி முத்து சரவணன், பாபு ஆகியோருக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, செல்வத்திற்கு ஆதரவான கட்டுமான நிறுவனம் ஒன்று, அந்த நிலத்தில் தனது பெயர் பலகையை வைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முத்து சரவணன், பாபு ஆகியோர் என்னை அணுகி, ‘‘அந்த இடத்தை எடுத்துக் கொண்டு, எங்களுக்கு தலா ரூ.50 லட்சம் கொடுத்தால் போதும்,’’ என்றனர். சம்பந்தப்பட்ட அந்த இடத்திற்கு சென்று, கட்டுமான நிறுவனத்தின் பெயர் பலகையை எடுத்துவிட்டு, புதியதாக ஒரு பெயர் பலகையை வைத்தேன். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த செல்வம், தனது ஆதரவாளர்களுடன் பிரச்னை செய்தார். இதனால், திட்டமிட்டு செல்வத்தை கொலை செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.