
தேனி அருகே பெற்ற மகளை மிரட்டி பலாத்காரம் செய்ததில் கர்ப்பிணியாக்கி விட்டு காதலன் மீது பழி போட்ட தந்தையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி பிரசவத்துக்காக கடந்த பிப்ரவரி மாதம் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிறுமியின் வயதில் சந்தேகமடைந்த மருத்துவர்கள் இது குறித்து குழந்தைகள் நலக்குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் அவர்கள் விசாரணை நடத்தியதில் சிறுமிக்கு 17 வயது என தெரியவந்தது. இது குறித்து தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். சிறுமியிடம் கேட்ட போது தனது உறவினரான 22 வயது வாலிபரை காதலித்து வந்ததாகவும், அவருடன் நெருங்கி பழகியதால் கர்ப்பிணியானதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் அந்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பாக வழக்கு தேனி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது சிறுமியை தான் காதலித்தது உண்மைதான். ஆனால் அவரது குழந்தைக்கு தான் தந்தை அல்ல என்றும் தான் அவரிடம் தவறாக நடக்கவில்லை என்றும் நீதிபதி முன்பு கதறி அழுதார். இதனையடுத்து போலீசார் சிறுமியின் தந்தை மீது சந்தேகமடைந்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது முன்ணுக்குப்பின் முரணாக வகையில் பதிலளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் தந்தை மற்றும் காதலன் மற்றும் பிறந்த குழந்தை ஆகிய 3 பேருக்கும் டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சிறுமியின் தந்தையின் டி.என்.ஏ.வும், குழந்தையின் டி.என்.ஏ.வும் ஒத்துப்போனது. ஆனால் காதலனின் டி.என்.ஏ. வேறுபட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து சிறுமியின் தந்தையிடம் நடத்திய விசாரணையில் அவர் தனது மகளை பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் இது குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று தந்தை மிரட்டி வந்துள்ளார். இதனையடுத்து போலீசார் சிறுமியின் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர். பிறகு அவரது காதலனை விடுதலை செய்தனர். பெற்ற மகளையே தந்தை கர்ப்பிணியாக்கி விட்டு காதலன் மீது பழி போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.