
சொத்துக்காக மாமனாரை கூலிப்படை வைத்து கொலை செய்த மருமகள் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தர பிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டத்திற்குட்பட்ட தட்டினா கிராமத்தைச் சேர்ந்தவர் சாலினி. இவரது கணவர் சஞ்சிவ் கடந்த 2018ம் ஆண்டு உயிரிழந்தார். இதையடுத்து சாலினிக்கும் அவரது மாமனார் சத்பாலுக்கு இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. தான் உயிரோடு இருக்கும் வரை சொத்தை தரமாட்டேன் என சத்பால் திட்டவட்டமாக கூறியுள்ளார். இதையடுத்து அவரையே கொலை செய்ய மருமகள் சாலினி திட்டம் தீட்டினார்.
இதனையடுத்து, பணம் கொடுத்து கூலிப்படையை ரெடி செய்து மாமனாரை கொடூரமாக வெட்டியுள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்திவு செய்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து, சாலினியை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதில், சாலினிக்கு விபின் என்ற கள்ளக்காதலன் இருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. சஞ்சிவ்வின் நண்பரான விபின், அவரது மறைவுக்கு பின் அடிக்கடி சஞ்சிவ் வீட்டுக்கு வந்துள்ளார். இதில், சாலினி மற்றும் விபின் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. சத்பாலை வேவு பார்த்து கூலிப்படையினரையும் ஏற்பாடு செய்தது விபின்தான் என கூறப்படுகிறது. இந்த கொலை தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.