
சிவசங்கர் பாபா பாலியல் வழக்கு விவகாரத்தில் சிவசங்கர் பாபாவின் அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப்பில் உள்ள தரவுகளின் அடிப்படையில் 5 ஆசிரியைகளிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சுசில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவின் அறையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அந்த சோதனையின்போது சிவசங்கர் பாபாவின் அறையிலிருந்து லேப்டாப் மற்றும் கணினி சி.பி.யூ-க்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. முன்னதாக சிவசங்கர் பாபாவுக்கு உதவி செய்வதாகக் கூறி சுசில் ஹரி பள்ளியைச் சேர்ந்த தீபா, பாரதி உட்பட 5 ஆசிரியைகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இந்த வழக்கு தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 5 ஆசிரியைகளும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என செங்கல்பட்டு அனைத்து மகளிர் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்திருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று தீபா மற்றும் பாரதி உட்பட 5 ஆசிரியைகளும் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகி கையொப்பமிட்டனர்.
இந்நிலையில் வருகின்ற திங்கட்கிழமை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராக உள்ள தீபா உட்பட 5 ஆசிரியைகளிடமும் சி.பி.சி.ஐ.டி போலீசார் சிவசங்கர் பாபாவின் அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப்பில் உள்ள தரவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் எனவும் சி.பி.சி.ஐ.டி போலீசார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.