
கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட மோதலால் தேவேந்திரனை அவரது நண்பர்களே கொடூரமான முறையில் கொலை செய்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கஞ்சா விற்பனை
தாம்பரம் அருகே மணிமங்கலம் கிராமம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் பஞ்சாட்சரம். கூலி தொழிலாளி. இவரது மகன் தேவா (எ) தேவேந்திரன் (25). அதே பகுதியை சேர்ந்த நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். மேலும், இரவு நேரங்களில் பணம், செல்போன் பறிப்பு உள்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். போலீசாரின் 'பி' வகை ரவுடி பட்டியலில் இருந்தார்.
கொலை
இந்நிலையில், நேற்று முன்தினம் தேவேந்திரன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக தந்தை மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், தேவேந்திரனை தேடி வந்தனர். இந்நிலையில், மணிமங்கலம் காவல் நிலையம் அருகே புதிதாக கட்டப்படும் கட்டிடத்தின் மேல் தளத்தில், தேவேந்திரன் உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தது தெரிந்தது.
போலீஸ் ஸ்டேஷன்
இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தேவேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில் கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட மோதலால் தேவாவின், நண்பர்கள் அவரை கொலை செய்தது தெரிந்தது. இதனையடுத்து, கொலை செய்த குற்றவாளிகளை பிடிக்க போலீசாதர் தீவிரம் காட்டி வருகின்றனர்.