கோவையில் பெண்கள் விடுதிக்குள் இரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர் நிர்வாணமாக நுழைந்ததாக கூறி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கல்லூரி விடுதிக்குள் மர்ம நபர்கள்
கோவை மருதமலை சாலையில் பாரதியார் பல்கலைகழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கனக்கான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கிபடித்து வருகின்றனர். இந்தநிலையில் அந்த பகுதியில் உரிய பாதுகாப்பு இல்லாத காரணத்தில் மர்ம நபர்கள் பல்கலை கழக வளாகத்தில் அடிக்கடி ஆயுதங்களோடு சுற்றி வந்துள்ளனர். இது தொடர்பாக மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்திருந்தனர். ஆனால் புகார் மீது கல்லூரி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதனையடுத்து நேற்று இரவு 5 பேர் கொண்ட கும்பல் மாணவிகள் விடுதிக்குள் புகுந்துள்ளது. அந்த 5 பேர் கொண்ட கும்பலில் ஒருவர் நிர்வாணமாக இருந்துள்ளார். இதனை கண்ட மாணவிகள் அச்சமடைந்துள்ளனர். தொடர்ந்து மாணவிகள் கூச்சல் எழுப்பிய காரணத்தால் மர்ம நபர்கள் மாணவியர் விடுதியில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். அப்போது மர்ம நபர்களை மாணவிகள் தூரத்தில் இருந்து புகைப்படமும் எடுத்துள்ளனர்.
undefined
நிர்வாணமாக நுழைந்த மர்ம நபர் யார்?
இந்தநிலையில் பாரதியார் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து பல்கலைக்கழக விடுதியில் தங்கி பயின்று வரும் மாணவிகள் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள், வகுப்புகளை புறக்கணித்து பல்கலைக்கழக நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பல்கலைக்கழக விடுதியில் தங்கி பயின்று வரும் மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். மேலும் பெண்கள் பாதுகாப்பிற்கு சிசிடிவி கேமரா கூட கல்லூரி வளாகத்தில் இல்லையென்றும் மாணவிகள் குற்றம் சாட்டினர். மர்ம நபர்கள் விடுதிக்குள் நுழைவதால் அவ்வப்போது மாணவிகளின் பொருட்களும் திருடு போனதாகவும் மாணவிகள் தெரிவித்துள்ளர். மேலும் கல்லூரி விடுதிக்குள் நுழையும் நபர்களை கைது செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள மாணவிகள், மர்ம நபர்களால் தங்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர்
போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு
இதையடுத்து திடீரென கோவை மருதமலை சாலைக்கு சென்று மாணவிகள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பல்கலைக்கழக துணைவேந்தர் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நேரில் வர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனிடையே போலீசார் மாணவிகளை சமாதானப்படுத்தி மீண்டும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமர வைத்தனர். தகலறிந்து அங்கு வந்த பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பெண்கள் அடங்கிய தனி குழுவை பாதுகாப்புக்கு நியமிப்பதாகவும், விடுதி வளாகத்தை சுற்றி மின் விளக்குகள் பொருத்தப்படும் எனவும் தெரிவித்தார். அதுவரை விடுதிக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர் மாணவிகளின் திடீர் போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.