சம்பளத்தை கேட்டவருக்கு பெல்ட் அடி: பெண் தொழிலதிபர் செய்த கொடூரம்!

By Manikanda Prabu  |  First Published Nov 24, 2023, 6:24 PM IST

சம்பளத்தை கேட்டவரை பெல்ட்டால் அடிக்க வைத்த பெண் தொழிலதிபர், தனது காலணியை பாதிக்கப்பட்டவரது நாக்கால் தடவ விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


குஜராத் மாநிலம் மோர்பி ராவபர் சௌக்டியில் உள்ள ஒரு பீங்கான் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக நிலேஷ் தல்சானியா எனும்  தலித் இளைஞர் கடந்த அக்டோபர் மாதம் 2ஆம் தேதி பணிக்கு சேர்ந்துள்ளார். ஆனால், அக்டோபர் 18ஆம் தேதி அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மாத சம்பளமாக அவருக்கு ரூ.12,000 பேசப்பட்டுள்ளது. எனவே, 18 நாட்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்று அவர் எதிர்பார்த்து காத்திருந்துள்ளார். ஊழியர்களின் சம்பளம் ஒவ்வொரு மாதமும் ஐந்தாம் தேதி அவர்களின் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. அதன்படி, நவம்பர் 5ஆம் தேதி அந்தத் தொகை கணக்கில் வரவு வைக்கப்படும் என அவர் நினைத்துள்ளார். ஆனால், சம்பளம் வரவு வைக்கப்படவில்லை.

Tap to resize

Latest Videos

இதனால், நிறுவனத்தின் உரிமையாளரான பெண் தொழிலதிபர் விபூதி என்கிற ராணிபா படேலுக்கு அவர் நினைவூட்டல் அனுப்பியுள்ளார். இருப்பினும், சம்பளம் குறித்து அவர் எதுவும் பேசாததால், தனது ஊதியத்தை தருமாறு நிலேஷ் தல்சானியா தொடர்ந்து கேட்டுள்ளார்.

அரசு பெண்கள் பள்ளி கழிப்பறைக்குள் பதுங்கி இருந்த வாலிபர்.. அலறியடித்து ஓடிய மாணவிகள்..!

இந்த நிலையில், சம்பவ தினத்தன்று அவரது மூத்த சகோதரர் மெஹுல் மற்றும் நண்பர் பாவேஷ் மக்வானா ஆகியோருடன் நிறுவனத்துக்கு நேரடியாக சென்று சம்பளத்தை கேட்டுள்ளார். அப்போது, நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் ரபாரி மற்றும் ராஜ் பட்டேல் ஆகியோர் இந்த மூவரையும் தாக்கியுள்ளனர்.

அதன்பிறகு, நிறுவனத்தின் மொட்டை மாடிக்கு அவரை அழைத்து சென்ற ராணிபா படேல், ஐந்து பேரை கொண்டு அவரை பெல்ட்டால் அடிக்க செய்துள்ளார். பின்னர், தனது காலணியை பாதிக்கப்பட்டவரது நாக்கால் ராணிபா படேல் தடவ விட்டுள்ளார். மேலும், இந்த சம்பவத்தை வீடியோவாகவும் அவர்கள் எடுத்துள்ளனர்.

இதுகுறித்து மோர்பி ஏ-பிரிவு காவல்நிலையத்தில் நிலேஷ் தல்சானியா அளித்த புகாரின் பேரில், ராணிபா படேல், ஓம் படேல், ராஜ் படேல், பரீக்ஷித், டி.டி.ரபாரி மற்றும் ஒரு அடையாளம் தெரியாத நபர் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் தலித் என்பதால், குற்றம் சாட்டப்படுபவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

click me!