கோவையில் தனியார் பள்ளி மாணவிகளிடம் அந்தரங்க புகைப்படங்களை அனுப்புமாறு வற்புறுத்திய ஆசிரியரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை அவினாசி சாலையில் இயங்கி வரும் தனியார் பள்ளியில், அருண் புருன்(வயது 28) என்பவர் இறகு பந்து விளையாட்டு பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் பேட்மிட்டன் பயிற்சி பெறும் மாணவியிடம் செல்போனில் வாட்சப் வாயிலாக பேசிவந்ததாகக் கூறப்படுகிறது. மாணவியிடம் நட்பாக பேசி புகைப்படங்கள் வாங்கியுள்ள அவர், ஒரு கட்டத்தில் அத்துமீறி மாணவியின் நிர்வாண புகைப்படங்களை கேட்டுள்ளார்.
மேலும் அந்த மாணவி பள்ளி வளாகத்தில் ஆடைகளை மாற்றும் போது மறைந்திருந்து புகைபடங்களும் எடுத்துள்ளார். இந்நிலையில் நிர்வாண புகைப்படங்கள் கேட்டது குறித்து மாணவி, தனது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து, மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகார் தொடர்பாக விசாரித்த மத்திய அனைத்து பெண்கள் காவல் நிலைய போலிசார் பேட்மிட்டன் பயிற்சியாளர் அருண் புருனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பயிற்சியாளர் அருண் புருனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் மேலும் 5 மாணவியருக்கு செல்போன் மூலமாக பாலியல் துன்புறுத்தல் கொடுத்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அந்த மாணவிகளிடமும் புகார் பெற்று நடவடிக்கை எடுக்க மகளிர் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D