
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கழிப்பறைக்குள் பதுங்கிய இருந்த வாலிபரை கண்டு மாணவிகள் அலறி கூச்சலிட்ட படியே வெளியே ஓடிவந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அப்பள்ளியில் உள்ள கழிப்பறையில் வாலிபர் ஒருவர் பதுங்கி இருந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள் அலறி கூச்சலிட்டபடியே கழிவறையில் இருந்து வெளியே ஓடிவந்துள்ளனர். இதுதொடர்பாக தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் தகவலை தெரிவித்தனர்.
இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பார்த்தபோது அந்த வாலிபர் கழிவறைக்குள் சென்று உள்பக்கமாக பூட்டிக்கொண்டு திறக்காமல் இருந்துள்ளார். இதனையடுத்து அருகில் இருந்தவர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கதவை உடைத்து உள்ளே பதுங்கி இருந்த வாலிபரை மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் நந்தம் காமராஜர் நகரை சேர்ந்த பெரியசாமி (24) என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.