பெற்ற குழந்தையை ரத்தம் சொட்ட சொட்ட வெறி பிடித்தாற் போல் தாக்கிய சம்பவம்.. போலீசில் தாய் பகீர் தகவல்..!

By vinoth kumarFirst Published Aug 30, 2021, 12:24 PM IST
Highlights

காவல்துறையினர் தீவிர விசாரணை முடிவடைந்த நிலையில் தாய் துளசி செஞ்சி முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

குழந்தையை அடித்து உதைத்து சித்ரவதை செய்ததாக கைது செய்யப்பட்ட சத்தியமங்கலத்தை சேர்ந்த தாய் துளசியை மனநலம் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு காவல்துறையனர் அழைத்து சென்றுள்ளனர்.  

செஞ்சி அருகே மணலப்பாடி மதுரா மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவழகன் (37) இவருக்கும், ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த துளசி (22) என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு கோகுல் (4), பிரதீப் (2) ஆகிய மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், துளசி தனது இளைய மகன் பிரதீப்பை சரமாரியாக தாக்கி அதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதில், படுகாயமடைந்த குழந்தையை அவரே புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார்.  இதற்கிடையே, கடந்த 40 நாட்களுக்கு முன் துளசியின் செல்போனில் வடிவழகன் பார்த்தபோது, அதில் குழந்தையை துளசி தாக்கும் நான்கு வீடியோக்களை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதில், குழந்தையை, துளசி காலணியாலும், கைகளாலும் கடுமையாக தாக்கியும், குழந்தையின் வாயில் ரத்தம் வழிவதும், காலை முறுக்கும் காட்சிகளும் இடம்பெற்று பார்ப்போரை அதிர வைக்கும் அளவுக்கு இருந்துள்ளது.

இந்நிலையில் குழந்தைகள் மீது கொடூர தாக்குதல் நடத்திய தாய் ராணி ஆந்திர மாநிலத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டதாக தகவல் வெளியானது. தற்போது குழந்தைகள் தந்தை வடிவழகனின் பாதுகாப்பில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தாய் குழந்தைகளை கொடூரமாக தாக்கிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.  இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார், விசாரணை மேற்கொண்டனர். 

இதனையடுத்து சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் வடிவழகன் கொடுத்த புகாரில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார்  சித்தூரில் வைத்து துளசியை கைது செய்தனர்.  இதனையத்து, இன்று காலை சத்தியமங்கலம் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவரிடம் 2 மணிநேரம் தீவிரமாக விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் மிஸ்டு காலில் அறிமுகமாகி வாட்ஸ் அப் வீடியோ மூலம் பழகி வந்த பிரேம்குமார் என்ற நபருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக குழந்தையை தாக்கியதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பிரேம்குமாரை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்துள்ளனர்.

இந்நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை முடிவடைந்த நிலையில் தாய் துளசி செஞ்சி முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அதன்படி, செஞ்சி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை முடிந்த நிலையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதற்காக துளசி அழைத்துச் செல்லப்பட்டார். மன நல மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு துளசி சிறையில் அடைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!