பெண்ணின் வீட்டுக்கு இரவு நேரத்தில் சென்று வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளனர். பெண்ணின் உடைகளை அகற்றி வாயில் சிறுநீர் கழித்துள்ளனர்.
பீகாரில் உள்ள மோசிம்பூர் கிராமத்தில் 1,500 ரூபாய் கடனுக்கான கூடுதல் வட்டியைத் திருப்பிச் செலுத்தத் தவறியதாகக் கூறி, 30 வயது தலித் பெண் ஒருவர் சனிக்கிழமை இரவு கொடூரமாகத் தாக்கப்பட்டு, வாயில் சிறுநீர் கழித்து துன்புறுத்தப்பட்டிருக்கிறார் என பாட்னா போலீசார் தெரிவித்துள்ளனர்.
பிரமோத் சிங், அவரது மகன் அன்ஷு குமார் மற்றும் மேலும் நான்கு பேர் தன்னை தாக்கியதாக பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் காட்டியுள்ளார். அவரது குடும்பத்தினரின் கூற்றுப்படி, கடனும் அதன் வட்டியும் ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டன என்றும் இருப்பினும், கூடுதல் தொகையை வட்டியாக திருப்பிச் செலுத்தும்படி வற்புறுத்தினர் என்றும் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக பாட்னா காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் தலைமறைவாக இருப்பதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். போலீசார் சென்றபோது அவர்களின் வீடு பூட்டப்பட்டுக் கிடந்ததால், அவர்களைப் பிடிக்க விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
"பிரமோத் மற்றும் அவரது கூட்டாளிகள் நான்கு நாட்களுக்கு முன்பு வட்டித் தொகை நிலுவையில் இருப்பதாகக் கூறி அவரை அணுகினர். அவர் போலீசில் புகார் செய்தார். இது பிரமோதை மேலும் கோபப்படுத்தியது" என்கிறார் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் சுபோத் தாஸின் மூத்த சகோதரர் அசோக் தாஸ்.
சனிக்கிழமை இரவு, பெண்ணின் வீட்டுக்குச் சென்ற பிரமோத், அவரது மகன் அன்ஷு குமார் மற்றும் நான்கு பேருடன் வந்து அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக அசோக் தாஸ் சொல்கிறார்.
"நாங்கள் அவரைத் தேடி வெளியே சென்றோம், அவர் ஆடை இல்லாமல் வீட்டை நோக்கி ஓடி வருவதைக் கண்டு, துணிகளால் போர்த்தி வீட்டிற்கு அழைத்து வந்தோம். அவர் தனது உடைகள் கழற்றப்பட்டதாகவும், பிரமோத்தின் மகன் தன் வாயில் சிறுநீர் கழித்ததாகவும் எங்களிடம் கூறினார். அவரது தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. தொடைகளில் தாக்கிய அடையாளங்களும் உள்ளன” என்று தாஸ் கூறினார்.
பாதிக்கப்பட்ட பெண்ணைத் தாக்கியவர்கள் கிராமத்தில் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் என்றும், மகாதலித் சமூகத்தினரின் சில வீடுகள் மட்டுமே அந்த கிராமத்தில் இருப்பதாகவும் தாஸ் சொல்கிறார். "நாங்கள் பயத்தில் இருக்கிறோம், சில நாட்களுக்கு இங்கிருந்து வெளியேறி வேறு பகுதிக்குச் சென்றுவிடலாம் என நினைக்கிறோம்" தாஸ் தெரிவிக்கிறார்.
பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். அதில் பிரமோத், அன்ஷு மற்றும் 3-4 அடையாளம் தெரியாத நபர்களின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார் என காவல்துறையினர் கூறுகின்றனர்.