அடச்சீ... தமிழகத்தில் இத்தனை பள்ளிகளில் காம வக்கிர ஆசிரியர்களா..? பிஎஸ்பிபி பள்ளியால் விவகாரம் விஸ்வரூபம்..!

By Thiraviaraj RMFirst Published May 27, 2021, 12:00 PM IST
Highlights

தமிழகத்தில் பல பள்ளி-கல்லூரிகளில் ஆசிரியர்களின் அத்துமீறல்கள் குறித்து 30 பேர் புகார் அளித்து உள்ளது அதிர்ச்சியையும் அவமானத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 
 

தமிழகத்தில் பல பள்ளி-கல்லூரிகளில் ஆசிரியர்களின் அத்துமீறல்கள் குறித்து 30 பேர் புகார் அளித்து உள்ளது அதிர்ச்சியையும் அவமானத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த சென்னை கே.கே.நகர் பத்ம சேஷாத்திரி பாலபவன் பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆசிரியர் ராஜகோபாலன் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த பாலியல் குற்றங்களை விசாரிக்கும் கமிட்டியில் முக்கிய பொறுப்பில் இருந்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க பள்ளி நிர்வாகம் தயக்கம் காட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ராஜகோபாலன் விவகாரம் குறித்து நேரில் விசாரிக்க சென்றபோது மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடமும், துணை கமிஷனரிடம் பள்ளி நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

இதையடுத்து பத்ம சேஷாத்திரி பள்ளி தாளாளர் ஷீலா ராஜேந்திரா, முதல்வர் கீதா கோவிந்தராஜன் ஆகியோருக்கு போலீசார் சம்மன் அனுப்பி அவர்களிடம் நேற்று முன்தினம் சென்னை அசோக்நகர் போலீஸ்நிலையத்தில் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் அப்பள்ளியின் முதல்வர் கீதா கோவிந்தராஜன் சென்னை அசோக்நகர் போலீஸ் நிலையத்துக்கு நேற்றும் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அங்கு அவரிடம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமி, தியாகராயர்நகர் துணை கமிஷனர் ஹரிகிரண் பிரசாத் ஆகிய 2 பேரும் விசாரணை நடத்தினர்.

2-வது நாளாக அவரிடம் 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நீடித்தது. அப்போது, ஆசிரியர் ராஜகோபாலனுக்கு ஆதரவாக பள்ளி நிர்வாகம் செயல்பட்டதா? அவரின் அத்துமீறல்கள் நிர்வாகிகளின் கவனத்துக்கு ஏற்கெனவே வந்ததா? உள்ளிட்ட சுமார் 100 கேள்விகளை போலீசார் கேட்டுள்ளனர். இந்த விசாரணையின்போது, ‘ஆசிரியர் ராஜகோபாலன் மீது ஏற்கனவே எத்தனை மாணவிகள், பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்? அந்த புகாரின் பேரில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இந்த புகார்கள் குறித்து போலீசார் கவனத்துக்கு கொண்டு வராதது ஏன்? என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை போலீஸ் அதிகாரிகள் எழுப்பினர்.

அதற்கு பெரும்பாலான கேள்விகளுக்கு பள்ளி முதல்வர் கீதா கோவிந்தராஜனின் பதில் மவுனமாக இருந்ததாக கூறப்படுகிறது. கீதா கோவிந்தராஜன் அளித்த பதில்களை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். எழுத்து பூர்வமாகவும் பெற்றுள்ளனர். இந்நிலையில் மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் வர வேண்டும் என்று கூறி கீதா கோவிந்தராஜனை போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க காவல் துணை ஆணையர் ஜெயலட்சுமியின் செல்போன் எண்ணுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள், முன்னாள் மாணவிகள் என சுமார் 30 பேர் தங்கள் ஆசிரியர்களின் அத்துமீறல்கள் தொடர்பாக புகார் தெரிவித்ததாகவும், சென்னையில் மட்டும் 10 பேர் புகார் கூறியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார்கள் அளிக்கலாம் என்றும், அவர்களது பெயர், விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும், புகாரை தன்னுடைய 94447 72222 என்ற செல்போன் எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு துணை கமிஷனர் ஜெயலட்சுமி கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவரது செல்போன் எண்ணிற்கு தினமும் ஏராளமான அழைப்புகள் வருகின்றன. அவர் சென்னைக்கு மட்டும் அதிகாரி என்றாலும், தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள், பெற்றோர்களும் புகார்களை அளித்து வருவதாக கூறப்படுகிறது.

சென்னையில் 10 பள்ளி-கல்லூரியை சேர்ந்த மாணவிகளும், பிற மாவட்டங்களில் 20 பள்ளி-கல்லூரியை சேர்ந்த மாணவிகளும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்கள், தொந்தரவுகள், இரட்டை அர்த்த பேச்சுக்கள் குறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியரின் பெயர் விவரங்களை குறிப்பிட்டு புகார் அளித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சென்னை அடையாறில் உள்ள ஒரு பயிற்சி அகாடமி மீதும் புகார் எழுந்துள்ளது.

இவ்வாறு புகார்கள் பெறப்பட்ட பள்ளி, கல்லூரியின் பெயர்களையும், ஆசிரியர்களின் பெயர்களையும் போலீசார் பட்டியலிட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் புகார்களின் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர். எனவே இந்த விவகாரத்தில் மேலும் பல ஆசிரியர்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஆசிரியரை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் மாணவிகள் யாரேனும் உள்நோக்கத்துடன் புகார் அனுப்பி இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

click me!