பெண் பத்திரிக்கையாளர் சவுமியா விஸ்வநாதன் கொலை வழக்கில் 5 பேரும் குற்றவாளிகள் என டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது
தெற்கு டெல்லியில் உள்ள வசந்த் குஞ்ச் என்ற இடத்தில் சவுமியா விஸ்வநாதன் என்ற பெண் பத்திரிகையாளர் கடந்த 2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நடந்து 15 ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரையும் குற்றவாளிகள் என டெல்லி சாகேத் நீதிமன்றம் அறிவித்துள்ளது. திருடப்பட்ட காரை வைத்திருந்ததாக ஐந்தாவது நபர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கான தண்டனை விபரம் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
சம்பவ தினத்தன்று பணி முடிந்து அதிகாலை வீடு திரும்பிக் கொண்டிருந்த சவுமியா விஸ்வநாதன் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ரவி கபூர், அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக் மற்றும் அஜய் குமார் ஆகிய 4 பேர் குற்றவாளிகள் என கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ரவீந்திர குமார் பாண்டே தீர்ப்பளித்தார். ஐந்தாவது நபரான அஜய் சேத்தி, திருடப்பட்ட காரை வைத்திருந்ததற்காக குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சவுமியா வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட ரவி கபூர், அமித் சுக்லா ஆகியோருக்கு, சவுமியா கொல்லப்பட்ட இடத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள வசந்த் விஹாரில் மற்றொரு பெண்ணான ஐடி ஊழியர் ஜிகிஷா கோஷ் கொல்லப்பட்ட வழக்கில், 2016ஆம் ஆண்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், மேல்முறையீட்டில் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இந்த வழக்கில் சவுமியாவின் பெற்றோர் டெல்லியில் தங்கி தொடர்ந்து தங்கள் மகளுக்கு நீதி கோரி சட்டப்போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கில் குற்றவாளிகளிக்கு அரசு தரப்பு மரண தண்டனையை கோருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
முன்னதாக, சவுமியா வழக்கில் ஆதாரங்கள் மற்றும் தடயங்கள் இல்லாததால் குழப்பமடைந்த டெல்லி காவல்துறை, மகாராஷ்டிர ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களின் கடுமையான கட்டுப்பாட்டுச் சட்டத்தை (MCOCA) செயல்படுத்தியது. 2009ஆம் ஆண்டில் ஐடி ஊழியர் ஜிகிஷா கோஷ் கொலையில் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் மீட்கப்பட்ட பிறகுதான், சவுமியா வழக்கில் போலீசார் துப்பு துலக்க முடிந்தது.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்: தமிழர்கள் 147 பேர் மீட்பு!
சாகேத் நீதிமன்றத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீடித்தது. இதனால், உயர் நீதிமன்றத்தின் கேள்விகளுக்கும் சாகேத் நீதிமன்றம் உள்ளானது. ஆனால், அரசு தரப்பு சாட்சிகள் ஆஜராகாதது மற்றும் சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமிப்பதற்கான கால அவகாசம் ஆகிய காரணங்களால் தாமதம் ஏற்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் விசாரணை நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்த வழக்கில் வருகிற 26ஆம் தேதியன்று குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தண்டனையை அறிவிக்கும் என்று தெரிகிறது. ஐடி ஊழியர் ஜிகிஷா மற்றும் சவுமியா போன்ற வழக்குகள், டெல்லி பெண்களுக்கு பாதுகாப்பற்றது என்ற விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன், பெண்கள் இரவில் வேலை செய்ய அனுமதிக்காது போன்ற, பெண்களின் தொழில்முறை சுதந்திரத்தை குறைக்கும் வகையில் விதிகள் வகுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.