திருமணமானது முதலே ரேகாவுக்கு தனது கணவரின் முதல் மனைவிக்குப் பிறந்த மகன் ஷபாத் மீது வெறுப்பு இருந்துவந்துள்ளது. அந்த வெறுப்பின் காரணமாகவே இந்தக் கொலையைச் செய்திருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தில் தனது மகனைக் கொன்று உடலை சாக்கடை தொட்டியில் மறைத்து வைத்த பெண் ஒருவர் செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். 11 வயது சிறுவன் ஷதாப் அக்டோபர் 15ஆம் தேதி காணாமல் போனதாக காவல்துறைக்கு திங்கட்கிழமை புகார் வந்தது.
புகாரை அடுத்து கோவிந்த் புரி பகுதியில் உள்ள சிறுவனின் வீட்டுக்கு அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் சோதித்தனர். இதில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் இருந்து சிறுவன் தன் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்று கண்டறிந்தனர். இது சந்தேகத்தை எழுப்பியதால் போலீசார் சிறுவனின் வீட்டை முழுமையாக சோதனையிட்டனர்.
சோதனையின்போது வீட்டு சாக்கடை தொட்டியில் சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. பெண்ணின் குடும்ப உறுப்பினர்களிடம் போலீசார் விசாரித்தபோது, சிறுவனின் சித்தி ரேகா, தனது தோழி பூனம் உதவியுடன் ஷபாத்தை கொன்றதாக ஒப்புக்கொண்டார்.
ஷபாத் வெளியில் சென்று விளையாடிவிட்டு வீடு திரும்பியதும் இந்தக் குற்றத்தைச் செய்ததாகவும் ரேகா போலீசாரிடம் கூறியிருக்கிறார். சிறுவனின் தந்தை ராகுல் சென் சலூன் நடத்திவருகிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முதல் மனைவியை விவாகரத்து செய்தார். பின், ரேகாவை மணந்துள்ளார்.
ஆனால் திருமணமானது முதலே ரேகாவுக்கு தனது கணவரின் முதல் மனைவிக்குப் பிறந்த மகன் ஷபாத் மீது வெறுப்பு இருந்துவந்துள்ளது. அந்த வெறுப்பின் காரணமாகவே இந்தக் கொலையைச் செய்திருக்கிறார் என்று போலீசார் கூறுகின்றனர். ரேகா ஷபாத்தைக் கொன்றதும் தனது கணவர் மற்றும் மாமியாரிடம் சிறுவன் கடத்தப்பட்டதாகக் கூறி நாடகமாடியுள்ளார்.
இந்தக் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ரேகா மற்றும் அவரது தோழி பூனம் இருவரையும் கைது செய்து சிறைக்கு அனுப்பியுள்ளனர்.