#Murder விடிய விடிய மது அருந்திய மூவர் உயிரிழப்பு; கோவை வழக்கில் திடீர் திருப்பம்; சயனைடாக மாறிய முன்பகை!!

By Kanmani PFirst Published Nov 15, 2021, 5:22 PM IST
Highlights

கோவையில் விடிய விடிய மது அருந்தியதால் மூவர் உயிரிழந்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.  

பண்டிகை என்றாலே மது என்றாகி விட்டது. நாள் தோறும் மது அருந்தினாலும் பண்டிகை நாட்களில் கொஞ்சம் ஸ்பெஷலாக விடிய விடிய குடிப்பதை வழக்கமாக நம்ம ஊர் குடிமகன்கள். அந்த வகையில் இந்த தீபாவளி சம்பவங்கள் கொஞ்சம் அதிகமாகத்தான் போய் விட்டன. மது போதை தலைக்கேறி அடுத்தவர் வீட்டில் நிர்வாணமாக தகராறில் ஈடுபட்ட முன்னாள் எம்.பி, விடிய விடிய குடித்ததால் மரணித்த மூவர் என பட்டியல் நீண்டது.

அவ்வாறு  கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் தீபாவளி கொண்டாட அதிகாலையிலேயே கள்ளச்சந்தையில் மதுபானம் வாங்கி அருந்திய 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மீதமுள்ள மதுபாட்டிலை கைபற்றிய போலீசார் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர் 

கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்திபன் (31), முருகானந்தம் (55),சக்திவேல்(61). இவர்களில் பார்த்திபனும், சக்திவேலும் பெயின்டராக பணிபுரிந்து வருகின்றனர். தென்காசியை சேர்ந்த முருகானந்தம் சமையலராக வேலை பார்த்து வருகின்றார். நண்பர்களான மூவரும் தீபாவளி கொண்டாடுவதற்காக இரவு நீண்ட நேரம் மது அருந்தியுள்ளனர்.

மது போதை தலைக்கேறிய நிலையிலும் காலை 6 மணி அளவில் மூவரும் மீண்டும் ஒரு முழுபாட்டில் மது பாட்டிலை பிளாக்கில் வாங்கியுள்ளனர். பின்னர் அருகில் இருந்த பாழடைந்த கட்டிடத்தில் அமர்ந்து 3 பேரும் மது அருந்தியுள்ளனர். பின்னர் சக்திவேல்,முருகானந்தம் இருவரும் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டா பொதுமக்கள் அவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இருவரையும்  பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளார்கள். 

இதை தொடர்ந்து  இவர்களுடன் மது அருந்திய பார்த்திபன் அவரது வீட்டில் உயிழந்து கிடந்ததை அறிந்த போலீசார் அவரது உடலையும் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இவர்கள் மூவரது உடலும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் உயிரிழந்த மூவரும் மீதம் வைத்திருந்த மதுவை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக ராஜசேகர் (63) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மதுவில் சயனைட் கலந்திருந்ததை உறுதி செய்துள்ளனர். இதை தொடர்ந்து போலீசாரின் தீவிர விசாரணையில் மின் விரோதம் காரணமாக ராஜசேகர் என்பவர் நண்பர்களான பார்த்திபன், முருகானந்தம், சக்திவேல் ஆகிய மூன்று போரையும் மதுவில் சயனைட் கலந்து கொலை செய்ததை கண்டறிந்து ராஜசேகரை கைது செய்துள்ளனர். 

click me!