
அண்ணாமலை மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்
பாப்புலர் ஃப்ரண்ட் இந்தியா அமைப்பின் மாநில செயலாளர் நாகூர் மீரான் தலைமையில் அந்த அமைப்பின் நிர்வாகிகள் சென்னை டிஜிபி அலுவலகத்தில் தமிழக காவல்துறை இயக்குநரை சந்தித்து புகார் மனு அளித்துளனர். அதில், தமிழகம் என்றும் போல் இன்றும் நல்லிணக்கத்திற்கு சான்றாக விளங்கி வரும் நிலையில். அதற்கு கேடு ஏற்படுத்தும் வகையில் சமீபகால சில நிகழ்வுகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்ட மதுரவாயலில் பாஜக பிரமுகர் ஒருவர் தனது காருக்கு தானே தீயிட்டு பதற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளார். இது போல சில மாதங்களுக்கு முன் மைக்கேல்பட்டி மாணவி தற்கொலையை திரித்து அதன் மூலம் பதற்றத்தை உருவாக்கி அரசியல் ஆதாயம் அடைய முயற்சித்தனர், தொடர்ச்சியாக ஒவ்வொரு நிகழ்வாக எடுத்து பிரச்சனைகளை உருவாக்கி தமிழகத்தில் அமைதி, நல்லிணத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக புகார் தெரிவித்து உள்ளனர். மேலும் சமீபத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ஒரு ஆடியோ தமிழகத்தில் பாஜக ஒரு சதிச்செயலை திட்டமிடுகிறது என்பதற்கு சான்றாக அமைந்துள்ளதாக அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டு
அந்த ஆடியோவில் அண்ணாமலை அவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் குறித்து பல்வேறு அவதூறுகள், ஆதாரமற்ற தகவல்களை பரப்பியதுடன். பாஜக தலைவர்களின் உயிர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினரால் ஆபத்து உள்ளது. எனவே அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை விளங்கி இருந்தும் பெரிய அளவிலான மோதலை உருவாக்க வேண்டும் அதன் மூலம் தமிழகத்தை வட இந்தியா போல் ஒரு மத பதற்றம் நிறைந்த மாநிலமாக மாற்ற முயற்சிக்கின்றனர் என்பது தெரியவருகிறது. இதுபோன்ற பொய்யான ஆடியோவை பரப்பி தமிழகத்தில் கலவரத்தை பரப்ப சதி செய்கிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது என தெரிவித்துள்ளனர்.
அண்ணாமலையை கைது செய்ய வேண்டும்
மேலும் தங்களின் வீடு, வாகனங்களை தாங்களே தாக்கிக்கொண்டு மத பதற்றத்தை ஏற்படுத்துவதை வழிமுறையாக கொண்டவர்கள் தமிழகத்தின் அமைதி, நல்லிணக்கத்தை கெடுக்க வேறு ஏதேனும் சதி செய்கிறார்களா என்பது குறித்து தமிழக அரசு விசாரிக்க வேண்டும். பொய்யான ஆடியோவை பரப்பிய அண்ணாமலையை கைது செய்து - தமிழக அரசு விசாரனை நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தின் நல்லிணக்கத்தை பாதுகாக்க கோரி பாப்புலர் ஃப்ரண்ட் இந்தியா அமைப்பினர் இந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.