
பெண் குளிப்பதை வீடியோ எடுத்து அதை அவரின் மகளிடம் காட்டி மிரட்டி ஆசைக்கு இணங்குமாறு அழைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வாலிபர் ஒருவர் மற்றும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செல்போனில் ரகசிய வீடியோ
பெரம்பலூர் மாவட்டம் கீழக்கணவாய் கிராமத்தை சேர்ந்தவர் கஞ்சமலை மகன் செல்வம்(33). இவர் பிஇ பொறியியல் பட்டம் படித்து விட்டு, அந்த பகுதியில் எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலைகள் செய்து வந்துள்ளார். இந்நிலையில், அவரது உறவினராக அதே ஊரைச்சேர்ந்த முத்துசாமி மனைவி மலர்க்கொடி(45) என்பவர் உதவியுடன் அதே ஊரைச்சேர்ந்த 35 வயதுடைய பெண் வீட்டில் குளித்துக் கொண்டிருந்த போது அவருக்கு தெரியாமல் செல்போன் மூலமாக வீடியோ எடுத்துள்ளார்.
மிரட்டல்
இந்த வீடியோவை அந்த பெண்ணின் மகளிடம் காட்டி தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி இருக்கிறார். முடியாது என்றால் அந்த பெண்ணின் தாய் குளிக்கும் வீடியோவை சமூக வலைத் தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார். செல்வத்தின் மிரட்டலை அடுத்து அந்தப் பெண் தன் தாயிடம் சென்று விவரத்தைக் கூறி கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
கைது
புகாரின் பேரில் செல்வம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். செல்வத்திற்கு உடந்தையாக இருந்த இரண்டு பெண்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். செல்வத்தின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், வேறு யாரிடமாவது இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளாரா? இதுபோன்று வேறு பெண்களின் வீடியோக்களை எடுத்து வைத்திருக்கிறாரா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.