கோவை தனியார் கல்லூரியில் நாய் ஒன்றை அடித்து கொன்ற இருவர் மீது துடியலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விலங்குளை சித்ரவதை செய்யும் மனிதர்கள்
ஆறு அறிவு படைத்த மனிதன் 5 அறிவு கொண்ட மிருகங்களை சித்ரவதை செய்யும் நிகழ்வு வீடியோவாக வெளியாகி கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வேலூரில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் குரங்கின் கை மற்றும் கால்களை கட்டி புதைத்தது. டீக்கடைக்காரர் கொதிக்கும் எண்ணெய்யை மாடு மற்றும் நாய்கள் மீது ஊற்றுவது, மாடியில் இருந்து நாயை கீழே தூக்கி விசுவது போன்ற சம்பவம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது போன்ற மனிதர்களுக்கு 5 அறிவா? 6 அறிவா என சந்தேகப்படும் நிலை இருந்தது. இந்தநிலையில் கோவை கல்லூரி ஒன்றில் சுற்றி திரிந்த நாயை கல்லூரி ஊழியர்கள் அடித்து கொல்லும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாயை கொன்ற ஊழியர்கள்
கோவை தனியார் கல்லூரி வளாகத்தில் சுற்றி திரிந்த நாய் ஒன்றை கொடூரமாக அடித்து கொன்ற வீடியோ ஒன்றை அக்கல்லூரியை சேர்ந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் விலங்குகள் நல அமைப்பின் சட்ட ஆலோசகர் ஐஸ்வர்யா அந்த வீடியோவை அடிப்படையாக கொண்டு துடியலூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் வீடியோவில் இருந்த இருவர் மீது விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற்னர். இது தொடர்பாக தனியார் கல்லூரி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என விலங்குகள் நல அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையும் படியுங்கள்