உணவின்றி துடித்து இறந்த 5 வயது சிறுவன்..பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்..

By Thanalakshmi VFirst Published Dec 19, 2021, 3:28 PM IST
Highlights

விழுப்புரம் அருகே தள்ளுவண்டியில் இறந்து கிடந்த 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் உணவின்றி பட்டினியால் இறந்திருக்கலாம் என்று பிரேத பரிசோதனையில் தெரியவந்ததுள்ளதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

விழுப்புரம் அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிவகுரு என்பவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையோரம் தள்ளுவண்டியில் சலவை தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்த போது , தள்ளு வண்டியில் 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் படுத்தவாறு கிடந்துள்ளான். உடனே அவரும் அந்த சிறுவன் தூங்குவதாக நினைத்து தட்டி எழுப்பிள்ளனர். ஆனால் எவ்வளவு தட்டியும் , சிறுவன் அசைவின்றி கிடந்ததால் அதிர்ச்சி அடைந்த அங்குள்ளவர்கள்,  விழுப்புரம் மேற்கு காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் சிறுவன் உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்தினர். பின்னர் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணையில் இறங்கிய போலீசார், அப்பகுதியில் உள்ள அனைவருடமும் இறந்த சிறுவனின் புகைப்படத்தை காட்டி விசாரணை மேற்கொண்டதில் அங்குள்ளவர்களின் குழந்தை இல்லை என்பது முதல்கட்டமாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இறந்த குழந்தை யாருடையது என்றும் யாராவது கொலை செய்துவிட்டு தள்ளு வண்டியில் உடலை வீசிச் சென்றுள்ளனரா என்னும் பல்வேறு கோணங்களிலும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த சிறுவன் அங்கன்வாடி மையங்களில் அரசு வழங்கும் சீருடை அணிந்திருந்ததாக சொல்லபடும் நிலையில்  மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும், சிறுவனின் புகைப்படத்தை போலீசார் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை இறந்த சிறுவன் குறித்த எந்தவொரு விவரமும் தெரியவில்லை என்று காவல்துறையினர் கூறுகின்றனர். மேலும் இதனை மேற்கொண்டு விசாரிக்க எஸ்.பி. ஸ்ரீநாதா உத்தரவின் பேரில், 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து எஸ்.பி., ஸ்ரீநாதா கூறுகையில், 'சிறுவனின் உடற்கூராய்வு முடிவடைந்தது. சிறுவன் கொலை செய்யப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளதாகவும் சிறுவன் குடலில் உணவு மற்றும் தண்ணீர் இல்லை எனவும் இதனால், சிறுவன் 2 நாட்கள் உணவு இல்லாமல் இருந்திருக்கலாம். அதன் காரணமாகவும் அவர் இயற்கையாக இறந்திருக்க வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார். முதலில், சிறுவன் யார் என அடையாளம் காணும் கோணத்தில் விசாரித்து வருகிறதாகவும் தெரிவித்தார். 

தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று முழங்கிய பாரதியார் வாழ்ந்த மண்ணில் உணவின்றி தண்ணீரின்றி பட்டினியால் பச்சிளம் குழந்தை பரிதாபமாக இறந்த சம்பவம் சமுகத்தின் அவல நிலையை காட்டும் விதமாக அமைந்துள்ளது.

click me!