
விழுப்புரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி சிவக்குமார், கடந்த 20 வருடங்களாக சென்னைக்குச் செல்லும் நெடுஞ்சாலை ஓரமாக தள்ளுவண்டியில் இஸ்திரி போட்டுவருகிறார். இவரின் தள்ளுவண்டியின் மீது கடந்த 15-ம் தேதி காலையில், 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் உயிரிழந்த நிலையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரேத பரிசோதனைக்காக அந்தச் சிறுவனின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த காவல்துறையினர், குழந்தை படுகொலை செய்யப்பட்டு தள்ளுவண்டியில் வீசப்பட்டானா என்ற சந்தேகக் கோணத்தில் வழக்கு பதிந்து விசாரணையை மேற்கொண்டுவந்தனர்.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. மருத்துவமனை உடற்கூறாய்வு முடிவில், உயிரிழந்த சிறுவன் இரு தினங்களாக உணவு இல்லாமலும், தண்ணீர் இல்லாமலும் பசியில் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்தச் செய்தி, கேட்போரின் நெஞ்சங்களை பட படக்கச் செய்தது. அதுவரையில் சிறுவனை யாரும் உரிமை கோராத நிலையில், சிறுவன் யார் என அடையாளம் காணும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரம் காட்டிவந்தனர். அதேபோல, சிறுவனின் உயிரிழப்பு கொலையா அல்லது இயற்கை மரணமா என்ற கோணத்திலும் போலீஸார் தீவிரமாக விசாரித்துவந்தனர்.
இந்நிலையில், அந்தச் சிறுவனை இரண்டு நபர்கள் தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இரண்டு சிசிடிவி காட்சிகளில், இருவர் நடந்து செல்கின்றனர். அதில் ஒருவர் போர்வையால் மூடி சிறுவனைத் தோளில் சுமந்து வருவது போன்ற காட்சியும், உடன் வரும் மற்றொருவர் கையில் ஆயுதம் போன்ற ஒன்றை எடுத்துச் செல்லும் காட்சியும் பதிவாகியுள்ளது. விழுப்புரம் பேருந்து நிலையத்தில் கிடைக்கபெற்ற இந்த சிசிடிவி காட்சியில், பழைய பேருந்து நிலையத்திலிருந்து நடந்தே வந்து 5 வயது குழந்தையின் சடலத்தை இருவரும் தள்ளுவண்டியில் போட்டு சென்றிருக்கலாம் என்று போலீஸ் சந்தேகிக்கின்றனர். பின்னர் சிறிது நேரம் கழித்து அச்சிறுவன் இல்லாமல் அந்த மர்மநபர்கள் மட்டும் பேருந்து நிலையம் வரும் காட்சியும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்நிலையில், இந்த இரண்டு நபர்கள் யார் என அடையாளம் காணும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவரும் காவல்துறையினர், இருவரும் விரைவில் பிடிபடுவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுக்குறித்து பேசிய போலீஸ் அதிகாரி "குழந்தை யாரென்று இன்னும் அடையாளம் கண்டறியப்படவில்லை. காட்சிகளில் காணப்பட்ட இருவர் வெளியாட்களாகவோ அல்லது புலம்பெயர்ந்த தொழிலாளர்களாகவோ இருக்கலாம். குழந்தை அங்கன்வாடி மையத்தின் உடையை அணிந்திருந்ததால், முதற்கட்ட விசாரணையின்படி, சிறுவன் தமிழகத்தில் தான் இருந்து இருக்க வேண்டும்." என்று கூறினார். மேலும் " சிசிடிவி பதிவில் காணப்பட்ட இரண்டு நபர்களும் அவரது உறவினர்களாக கூட இருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். இருவரும் போலீஸ் மற்றும் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களின் விசாரணைக்கு பயந்து தள்ளு வண்டியில் உடலை விட்டுச் சென்றிருக்கலாம் என்ற கூறிய அவர், சிறுவன் மரணம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரித்து வருவதாக தெரிவித்தார்.