பார்ட்டி என்ற பெயரில் சென்னை திருப்போரூரில் துப்பாக்கிகளுடன் சுற்றித் திரிந்த 3 நபர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே இள்ளலூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கட்டுமான பணிகளுக்காக கொண்டுவரப்பட்ட 3 டன் இரும்பு கம்பிகள் திருடுபோனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இரும்பு கம்பிகள் திருபோன பகுதியில் காவல் துறையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரோந்து பணியின் போது கார் ஒன்று நீண்ட நேரமாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்ததைக் கண்டு சந்தேகமடைந்த காவல் துறையினர் காரில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர்களது காரை சோதனை செய்ததில் அதில் அதிக அளவிலான விலை உயர்ந்த மதுபானங்கள் இருந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரிக்கப்பட்டதில், ஒருவர் முட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த பிரித்திவிராஜ் என்பதும், அவரது நண்பரான் மைசூரு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலத்தில் விலை உயர்ந்த மதுபானங்கள், துப்பாக்கிகள், தோட்டாக்களை வாங்கி வந்தது தெரிய வந்தது.
மீனவர் உயிரிழந்த விவகாரம்; தமிழகம் - கர்நாடகா இடையே போக்குவரத்து நிறுத்தம்
கைது செய்யப்பட்டவர்கள் 2 கார்களில் வந்ததாகவும், அந்த கார்கள் காப்புக்காடு பகுதியில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் அடையாளம் கூறிய கார்களை சோதனை செய்ததில் அதில் 3 துப்பாக்கிகள், 160 தோட்டாக்கள், 58 மது பாட்டில்கள் அரை கிலோ கஞ்சா மற்றும் உயர் ரக கை கடிகாரங்கள் இருந்ததை கண்டு காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
வாத்தி படத்தை வரவேற்று பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு வழங்கிய தனுஷ் ரசிகர்கள்
இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.30 லட்சம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாகவே அப்பகுதியில் துப்பாக்கி சத்தம் போன்று பலத்த சத்தம் அவ்வபோது கேட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ள நிலையில், இந்த துப்பாக்கிகளைக் கொண்டு இவர்கள் பயிற்சி மேற்கொண்டார்களா என்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.