ஏசி மின் கசிவில் 3 பேர் உயிரிழந்தது திட்டமிட்ட கொலை...! வெளியானது அதிர்ச்சி தகவல்..!

By vinoth kumarFirst Published May 17, 2019, 3:01 PM IST
Highlights

திண்டிவனம் அருகே ஏசி மின் கசிவில் 3 பேர் உயிரிழந்தது திட்டமிட்ட கொலை என போலீசார் தரப்பில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

திண்டிவனம் அருகே ஏசி மின் கசிவில் 3 பேர் உயிரிழந்தது திட்டமிட்ட கொலை என போலீசார் தரப்பில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவேரிப்பாக்கம் சுப்பராய பிள்ளை தெருவைச் சேர்ந்த ராஜ், அவரது மனைவி கலைச்செல்வி மற்றும் இளைய மகன் கெளதம் ஆகியோர் வீட்டின் ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் அந்த அறையில் தீப்பிடித்து எரிந்து மூன்று பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். 

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஏசி மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தே உயிரிழப்புக்குக் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் முதியவர் ராஜின் உடலில் இருந்து வழிந்த ரத்தம் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

 

தீ விபத்தில் சிக்கி உடல் கருகி உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், அவரது உடலில் இருந்து ரத்தம் வழிந்தது எப்படி என்ற கேள்வி எழுந்தது. எரிந்த நிலையில் அறையை விட்டு ராஜ் ஓடி வந்திருப்பதாக கூறப்படுவதால், அவரைத் தப்பிக்க விடக் கூடாது என்று எண்ணி யாராவது தாக்கி இருக்கலாம் என்றும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் அறைக்கு அருகில் கிடந்த காலி மண்ணெண்ணெய் கேன் போலீசாரின் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. உயிரிழந்த ராஜூவுக்கு அதிக சொத்துகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் சொத்துப் பிரச்சனையில் ராஜூ, அவரது மனைவி மற்றும் இளைய மகன் என மூவரும் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ எரிந்து கொண்டிருந்த போது ராஜின் மூத்த மகனான கோவர்த்தனன் அருகில் உள்ள மற்றொரு அறையில் தனது மனைவியுடன் உறங்கிக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. 

இது தொடர்பாக மூத்த மகன் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. இந்நிலையில் கோவர்த்தனனிடம் நேற்று இரவு முதல் போலீசார் தீவிரமாக விசாரணையை நடத்தி வருகின்றனர். மேலும் கௌதமன் தீக்காயத்தால் உயிரிழந்ததாகப் கூறப்படும் நிலையில், அவரது தாலையில் ரத்தக் காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது. கொலை தொடர்பாக 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே போலீசார் கூறுகையில் 3 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளது கிட்டதட்ட உறுதியாவிட்டது.

click me!