வாட்ஸ்-அப் குழு மூலம் போதை மருந்து சப்ளை செய்த கல்லூரி மாணவி..! அதிரடியாக கைது செய்த போலீஸ்

By Ajmal KhanFirst Published May 30, 2022, 1:41 PM IST
Highlights

சென்னை வி ஆர் மாலில் அனுமதியின்றி நடைபெற்ற மது விருந்தில் அதிகளவு போதை மருந்து எடுத்துக்கொண்ட மென் பொறியாளர் இறந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் போதை பொருட்களை சப்ளை செய்த கல்லூரி மாணவி உள்ளிட்ட3 பேரை கைது செய்துள்ளனர்.
 

மது விருந்தில் போதை பொருள்

சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் கடந்த வாரம்  இரவு மது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்  செல்போன் செயலி மூலம் பதிவு செய்து  900க்கும் மேற்பட்டவர்கள்  மது விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பிரேசிலைச் சேர்ந்த பிரசித்தி பெற்ற மந்த்ரா கோரா என்பவரின் ஆடல், பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் மென் பொறியாளராக பணியாற்றும் பிரவீன் (23)  தனது நண்பர்களோடு கலந்து கொண்டுள்ளார். அப்போது மது போதையில் நடனமாடிய பிரவீன் திடீரென மயங்கி கிழே விழுந்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனைக்கு பிரவீனை அழைத்து சென்ற சிகிச்சை அளிக்கப்பட்டது . அப்போது அதிகளவு போதை பொருள் பயன்படுத்தப்பட்ட காரணத்தால் பிரவீன் உயிரிழந்தார். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

வாட்ஸ் அப் குழு மூலம் போதை பொருள் சப்ளை

மது விருந்தில்  20 வயதுக்கும் குறைவான ஆண் மற்றும் பெண்கள் கலந்து கொண்டது தெரியவந்தது மேலும் மது மட்டுமில்லாமல் போதைப்பொருளும் விநியோகிப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக 8 பேரை போலீசார்  ஏற்கனவே கைது செய்திருந்தனர். இதனையடுத்து நடைபெற்ற தொடர் விசாரணையில்  உயர்நீதிமன்ற வழக்கறிஞரின் உதவியாளராக பணிபுரிந்து வரும் ஸ்ரீகாந்த் (28) என்பவர் மற்றும் அடையார் பெட்டிஷன் காலேஜில் எம் ஏ ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு பயிலக் கூடிய கோடம்பாக்கத்தை சேர்ந்த மாணவி டொக்காஸ் (24) மற்றும் கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்த அப்துல் அகமத் (21) ஆகியோர் வி. ஆர் மாலில் நடைபெற்ற விருந்தில் போதைப் பொருட்களை கொண்டு வந்து பலருக்கும் கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த 3 பேரும் வாட்ஸ் அப் குழு அமைத்து மது விருந்து நடைபெறும் டிஜே பார்ட்டிகளுக்கு போதைப்பொருட்களை சப்ளை செய்ததாக  கூறப்படுகிறது. 

போதை பொருள் விற்பனை - மாணவி கைது

 மேலும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் டொக்காஸிடம் இருந்த  போதை பொருட்களை பெற்று அதனை ஸ்ரீகாந்திடம் கொடுத்திருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீகாந்துடன் இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி உள்ளனர்.கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் இருந்து 2 லட்சம் மதிப்புடைய ஸ்டாம்ப் போதைப்பொருள் உட்பட பல்வேறு போதைப்பொருட்களை அண்ணாநகர் துணை ஆணையர் சிவ பிரசாத் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கல்லூரி மாணவியே போதைப்பொருள் விற்பனை செய்த சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

click me!