
டெல்லி ஜஹாங்கீர்புர் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் தொடர்புடையதாக இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறையில் எட்டு காவல் துறை அதிகாரிகள் மற்றும் நபர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டார்.
வன்முறையில் தொடர்புடையதாக இரண்டு மைனர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மூன்று நாட்டு துப்பாக்கிகள், ஐந்து வாள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களை ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விட்டனர்.
ஆயுதங்கள் பறிமுதல்:
கைதானவர்களில் அஸ்லாம் என்ற நபர் தான் காவல் துறை எஸ்.ஐ. மெடலால் மீனாவை துப்பாக்கியால் சுட்டார். அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இதோடு காவல் துறையினரின் கைது நடவடிக்கையை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட சிலரையும் போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
நேற்று வெளியான வீடியோவில் இரண்டாவதாக மற்றொரு நபர் துப்பாக்கியால் சுட்டது அம்பலமானது. துப்பாக்கியால் சுட்ட இரண்டாவது நபரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வன்முறை:
அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடைபெற்ற போது இரு பிரிவினர் இடையே கடும் மோதல் வெடித்தது. மோதலுக்கு அவர்கள் தான் காரணம் என இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் கையில் ஆயுதங்களை வைத்திருந்தனர் என்றும் அவர்கள் மசூதி ஒன்றை சூரையாட முயன்றனர் என அந்த பகுதியில் வசிக்கும் முஸ்லீம்கள் தெரிவித்தனர்.
அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் ஆயுதங்களை எடுத்து சென்றதை ஒப்புக்கொண்டனர். எனினும், வன்முறை வெடித்ததற்கு முஸ்லீம்கள் தான் காரணம் என அவர்கள் தெரிவித்தனர். முதலில் முஸ்லீம்கள் தான் கற்களை வீசி தாக்கினர் என அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
வழக்குப் பதிவு:
வன்முறையை தூண்டியது, கொலை முயற்சி, ஆயுதங்களை கையாண்டது என பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வன்முறை தொடர்பாக விசாரணை நடத்த குற்றப் பிரிவு மற்றும் சிறப்பு பிரிவை சேர்ந்த அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
கடந்த வாரம்- குஜராத், மத்திய பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் என நான்கு மாநிலங்களில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது வன்முறை வெடித்தது.