இதற்கு காரணமான இரண்டு பேரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இதுகுறித்து தகவல் தெரிந்தவர்கள் விரைந்து தொடர்பு கொள்ளவும்.
நியூ யார்க் நகரின் ரிச்மண்ட் ஹில் அருகே இரண்டு சீக்கியர்கள் தாக்கப்பட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன், ரிச்மண்ட் ஹில் பகுதியில் சுமார் 72 வயதான சீக்கிய நபர் நிர்மல் சிங் அடையாளம் தெரியாத நபர்களால் கடுமையான தாக்குதலுக்கு ஆளானர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சீக்கியர்கள் தொடர்ந்து தாக்கப்படும் விவகாரம் குறித்தும், இந்த தாக்குதல் குறித்தும் நியூ யார்க்கில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து உள்ளனர். மேலும் இந்த வழக்கை விசாரணை செய்யும் போலீஸ் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்து இருக்கின்றனர்.
கண்டனம்:
இது குறித்து இந்திய துணை தூதரகத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் அக்கவுண்டில் கருத்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த பதிவில், “இந்த தாக்குதலுக்கு கடுமையான கண்டனம் தெரிவிக்கிறோம். இந்த தாக்குதல் வருந்தத்தக்கது. காவல் துறையினருடன் தொடர்பு கொண்டு இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்தக் குற்றச் செயலில் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்,” என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ரகளை:
தாக்குதலுக்கு ஆளாகும் சீக்கியர்களிடம் இருந்து பொருட்களை திருடி செல்ல கயவர்கள் திட்டம் தீட்டி இருக்கலாம் என கூறப்படுகிறது. அதிகாலை வேளையில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இரண்டு சீக்கியர்களை மர்ம நபர்கள் கம்புகளால் தாக்கி, அவர்கள் தலையில் கட்டியிருந்த முண்டாசுகளை அவிழ்த்து ரகளையிலும் ஈடுபட்டுள்ளனர்.
நியூ யார்க் அட்டர்னி ஜெனரல்:
சீக்கியகர்கள் தாக்கப்படும் விவகாரம் குறித்து நியூ யார்க் அட்டர்னி ஜெனரல் லெட்டிசியா ஜேம்ஸ் தனது கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டு இருக்கிறார். அதில், "ரிச்மண்ட் ஹில் பகுதியில் நம் சீக்கிய சமூகத்திற்கு எதிராக நடத்தப்பட்டு இருக்கும் மற்றும் ஓர் வெறுப்பூட்டும் தாக்குதல் இது. இதற்கு காரணமான இரண்டு பேரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இதுகுறித்து தகவல் தெரிந்தவர்கள் விரைந்து தொடர்பு கொள்ளவும்," என குறிப்பிடப்படு இருக்கிறார்.
சட்டமன்ற உறுப்பினர்:
"சமீப காலங்களில் சீக்கிய சமுதாயத்திற்கு எதிராக வெறுப்புணர்வு குற்ற சம்பவங்கள் சுமார் 200 சதவீதம் அதிகரித்து உள்ளது. இது மிகவும் அபாயகரமான ஒன்று ஆகும். சீக்கிய சமுதாயத்திற்கு எதிராக நடைபெற்ற இரண்டு குற்ற சம்பவங்களையும் வெறுப்பு குற்றங்களாக கருத்தில் கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றவாளிகள் சட்டப்படி முழுமையாக தண்டிக்கப்பட வேண்டும்," என நியூ யார்க் மாநில சட்டமன்ற உறுப்பினரான ஜெனிபர் ராஜ்குமார் தெரிவித்து இருக்கிறார்.