குண்டர்கள் பணம் திருடியதாக குற்றம் சாட்டி சிறுவர்களை பிடித்து கட்டி வைத்து சிறுநீர் குடிக்க வைத்து அட்டூழியம் செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் திருட்டு சந்தேகத்தின் பேரில் அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு சிறுவர்களை சிறுநீர் குடிக்க வைத்து, அவர்களின் ஆசனவாயில் பச்சை மிளகாயை தேய்த்து, பலவந்தமாக ஊசிகளைச் செலுத்தியுள்ளனர். இந்தக் கொடுமைக்கு ஆளான சிறுவர்கள் இருவரும் 10 மற்றும் 15 வயதுடையவர்கள் என்பது குறிப்பித்தக்கது.
இந்தக் கொடூரமான தாக்குதலின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதில் சிறுவர்களை பச்சை மிளகாயை சாப்பிட வைத்தும், ஒரு பாட்டிலில் நிரப்பப்பட்ட சிறுநீரைக் குடிக்க வைத்தும் ஒரு கும்பல் அவர்களைத் துன்புறுத்துவதைக் காணமுடிகிறது. தாங்கள் சொல்வதுபோல செய்யவில்லை என்றால் அடித்துவிடுவோம் என்று மிரட்டுகின்றனர்.
அடையாளம் தெரியாத குண்டர்கள் பணம் திருடியதாக குற்றம் சாட்டி சிறுவர்களை பிடித்து கட்டி வைத்து இப்படி அட்டூழியம் செய்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.
மற்றொரு தெளிவற்ற வீடியோவில், சிறுவர்கள் தரையில் முகம் குப்புறக் கிடப்பது தெரிகிறது. அவர்களின் கைகள் முதுகுக்குப் பின்னால் கட்டப்பட்டு, கால்சட்டை கீழே இழுக்கப்பட்டுள்ளது. அப்போது ஒரு நபர் அவர்களின் ஆசனவாயில் பச்சை மிளகாயைத் தேய்க்கிறார். வலியால் அலறும் சிறுவர்களுக்கு மஞ்சள் நிற திரவம் ஊசி மூலம் செலுத்தப்படுகிறது.
ஆகஸ்ட் 4ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்த வீடியோ, மாவட்டத்தின் பத்ரா பஜார் காவல் நிலையப் பகுதியின் கொங்கட்டி சௌராஹாவுக்கு அருகிலுள்ள அர்ஷன் சிக்கன் கடையில் இருந்து பதிவுசெய்யப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோவை அறிந்து உடனடியாக தொடர்புடைய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். தாக்குதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்களில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சித்தார்த்தா கூறுகிறார்.