புதுச்சேரியில் புதிதாக 640 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் இன்று (பிப்.1) வெளியிட்டுள்ள தகவலில்: ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 3,366 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி – 380, காரைக்கால்- 179, ஏனாம்- 71, மாஹே- 10 என மொத்தம் 640 (19.01 சதவீதம்) பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் மொத்த தொற்று பாதிப்பு 1 லட்சத்து 61 ஆயிரத்து 891 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் தற்போது மருத்துவமனைகளில் 144 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 9,123 பேரும் என மொத்தமாக 9,267 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
undefined
மேலும் புதுச்சேரி கிருமாம்பாக்கம் வேணுகோபால் நகர் 33 வயது ஆண் நபர், முள்ளோடை மதிகிருஷ்ணாபுரம் 44 வயது ஆண் நபர், லாஸ்பேட்டை 41 வயது ஆண் நபர், தட்டாஞ்சாவடி மருதம் நகர் 75 வயது முதியவர் என 4 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,935 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.20 சதவீதமாக உள்ளது. புதிதாக 1,069 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்து 689 (93.08 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தமாக 15 லட்சத்து 35 ஆயிரத்து 643 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.’’இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.முன்னதாக, ஜனவரி 31 ஆம் தேதி புதுச்சேரியில் புதிதாக 504 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரியில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்குள் குறைந்து வருவதால் கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை, வருகின்ற 28-ம் தேதி நள்ளிரவு வரை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி கல்வி நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உணவகம் மற்றும் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும், கடற்கரைகள் முழு நேரமும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.