இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பத்மஜாவின் சடலத்தை கைப்பற்றி விசாரணையை துரிதப்படுத்தினர்.
சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் பத்மஜா. துணை நடிகையான இவர் சினிமாவிலும், விளம்பர படங்களிலும் நடித்து வந்துள்ளார். பத்மஜா வாடகைக்கு குடியிருந்த வீடு நேற்று நெடுநேரமாக திறக்கப்படாமல் இருக்கவே சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர் ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது பத்மஜா மின் விசிறியில் தூக்கில் தொங்கியது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பத்மஜாவின் சடலத்தை கைப்பற்றி விசாரணையை துரிதப்படுத்தினர். அதில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பத்மஜா பெங்களூருவில் உள்ள தனது அக்காவிற்கு வாட்ஸ் அப் வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கதறி, கதறி அழுதுள்ள பத்மஜா தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார்.
ஆந்திரா மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த பத்மஜா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பவன் என்பவரை திருமணம் செய்து கொண்டு, சென்னை வந்துள்ளார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் இருப்பதாக தெரிகிறது. இதனிடையே கணவன், மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனையால், கடந்த மாதம் பவன் ஆந்திராவிற்கு சென்றுவிட்டார். குழந்தையையும் உறவினர் ஒருவர் தூக்கிச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் உறவுக்கார இளைஞர் ஒருவருடன் அதே வீட்டில் வசித்து வந்துள்ளார் பத்மஜா. கணவர் இல்லாமல் வீட்டில் இருக்க வேண்டாம் என்று கூறிய வீட்டின் உரிமையாளர், பத்மஜாவை காலி செய்யுமாறு கூறியுள்ளார். இந்த சமயத்தில் தான் பத்மஜா ஃபேனில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஆனால் அவருடன் தங்கியிருந்த வாலிபரை காணவில்லை. மேலும் பத்மஜாவின் கணவர் மற்றும் உறவினரிடமும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.