தற்கொலை செய்துகொண்ட நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா, கடந்த ஓராண்டாக சிகிச்சை எடுத்து வந்தது குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் ஆண்டனி கடந்த 2005-ம் ஆண்டு சுக்ரன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். சினிமாவில் நுழைந்த அடுத்த ஆண்டே பாத்திமா என்பவரை திருமணம் செய்துகொண்டார் விஜய் ஆண்டனி. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். இதில் மூத்தமகள் பெயர் மீரா, இளைய மகள் பெயர் லாரா. இருவருமே பள்ளியில் படித்து வந்தனர். இந்த நிலையில், விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மீரா, நேற்று இரவு வழக்கம்போல் தூங்கச் சென்றிருக்கிறார். அதிகாலை 3 மணியளவில் மீராவின் அறைக்கு சென்று பார்த்த விஜய் ஆண்டனி, மகள் தூக்கில் தொங்கியபடி இருந்ததை பார்த்து பதறிப்போனார். இதையடுத்து மகளை மீட்டு அருகில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மீரா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... அப்போ தந்தை... இப்போ மகள்! அடுத்தடுத்த தற்கொலைகளால் அதிர்ச்சியில் விஜய் ஆண்டனி
மகளின் மறைவால் மனமுடைந்து போன விஜய் ஆண்டனிக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மீராவின் இந்த விபரீத முடிவுக்கு என்ன காரணம் என்பதை தெரிந்துகொள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக மீரா தற்கொலை செய்துகொண்ட அறையில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அவரின் செல்போனை பறிமுதல் செய்துள்ள போலீசார் அதை சோதனை செய்து வருகின்றனர்.
இதனிடையே விஜய் ஆண்டனியின் மகள் மீரா, கடந்த ஓராண்டாக மருத்துவ சிகிச்சை எடுத்து வந்ததாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. மீரா மன அழுத்ததில் இருந்ததாகவும் இதன் காரணமாக ஓராண்டாக அவர் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மீராவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம், மீராவுக்கு எதனால் மன அழுத்தம் ஏற்பட்டது என்பது குறித்தும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்... தற்கொலைக்கு முன்... விஜய் ஆண்டனி மகள் யாருடன் போனில் பேசினார்? போலீசார் தீவிர விசாரணை