பெரிய பட்ஜெட்டில் உருவாகும் முன்னணி நடிகர்களின் படங்கள் தோல்வியை சந்திக்க காரணங்கள் என்ன?

Published : Jun 07, 2025, 05:14 PM ISTUpdated : Jun 07, 2025, 05:25 PM IST
flop tamil movies 2025

சுருக்கம்

சமீப காலமாக பெரிய பட்ஜெட்டில் முன்னணி நடிகர்களை வைத்து எடுக்கப்படும் படங்கள் தோல்வியை சந்தித்து வருகின்றன. அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

தொடர் தோல்வியை சந்திக்கும் பெரிய பட்ஜெட் படங்கள்
 

கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி, மிகப் பெரிய இயக்குனர்கள், முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள் சமீப காலமாக தோல்வியை சந்தித்து வருகின்றன. அதே சமயம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள் வெற்றியைப் பெற்று வருகின்றன. உதாரணத்திற்கு சமீபத்தில் வெளியான ‘தக் லைஃப்’ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய இரண்டு படங்களை கூறலாம். ‘தக் லைஃப்’ திரைப்படம் ரூ.300 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் இந்த படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று தோல்வியை சந்தித்துள்ளது.

தமிழ் திரையுலகில் அதிகரித்த செயற்கைத்தனம்

அதேசமயம் வெறும் ரூ.7 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் ரூ.75 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்து சாதனை படைத்திருந்தது. சமீபகாலமாக மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் தமிழ்ப் படங்கள் தோல்வியையே சந்தித்து வருகின்றன. குறிப்பாக கதைகளை தேர்வு செய்வதில் நடிகர்களுக்கு ஏற்படும் குழப்பம், ஏற்கனவே பார்த்து சலித்த கதைகள், செயற்கைத் தனமான ஹீரோயிஸம், தேவையில்லாமல் வலிய திணிக்கும் பாடல்கள் ஆகியவை ரசிகர்களுக்கு ஒரு வித சோர்வை ஏற்படுத்தி உள்ளது. இவையே படம் தோல்வி அடைவதற்கு மிக முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.

எடுபடாமல் போன நட்சத்திர அந்தஸ்து

‘தக் லைஃப்’, ‘இந்தியன் 2’, ‘வேட்டையன்’, ‘கங்குவா’ போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் பெரிய பட்ஜெட்டில் உருவாகின. இதனால் இந்தப் படங்கள் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் படத்தின் கதை, திரைக்கதை, புதுமையின்மை ஆகிய காரணங்களால் படங்கள் சோபிக்கவில்லை. பிரம்மாண்டத்தை மட்டும் நம்பி, வலுவான கதை இல்லாததால் இந்தப் படங்கள் பார்வையாளர்களை ஈர்க்கத் தவறின. வலுவான கதையம்சம் இல்லாமல் எவ்வளவு பிரம்மாண்டம் காட்டினாலும் அது ரசிகர்களிடையே எடுபடாது என்பதற்கு இந்த படங்கள் சிறந்த உதாரணங்கள்.

ஓடிடியின் ஆதிக்கம் மற்றும் பான் இந்திய படங்கள் வருகை

ஓடிடி தளங்களின் வளர்ச்சி, ரசிகர்களுக்கு உலக தரத்திலான படங்களை எளிதில் பார்க்கக்கூடிய வசதியை கொடுக்கிறது. இதனால் ரசிகர்கள் புதிய கதைகள், தனித்துவமான திரைக்கதை, சிறந்த நடிப்பு ஆகியவற்றை கொண்ட உலகத்தர படங்களை பார்த்து ரசிக்கத் தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக பழைய ஃபார்முலா படங்களும், வழக்கமான நட்சத்திர படங்களும், அடித்துத் துவைத்த கதைகளும் இனி ரசிகர்களிடம் எடுபடபோவதில்லை. அதேபோல் பான் இந்தியா திரைப்படங்களின் வருகையும் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறுகின்றன. மலையாளத்தில் வெளியான ‘மஞ்சுல் பாய்ஸ்’ போன்ற படங்கள் தமிழ் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலைக் குவித்தன.

பார்த்து சலித்துப் போன கதைகள்

சமீபத்தில் வெளியான பல படங்கள் பழைய கதையம்சங்களுடன் கூடிய வகையிலேயே வெளிவந்தன. எளிதில் கணிக்க கூடிய அளவிற்கான திரைக்கதைகள் மற்றும் சலிப்பான காட்சிகளுடன் வெளிவந்த இந்த படங்களை ரசிகர்கள் விரும்பவில்லை. ரசிகர்கள் தற்போது புதுமையான சிந்தனைகள், சவாலான கதைகளையே எதிர்பார்க்கின்றனர். 'அயலான்' போன்ற சில படங்கள் புதிய முயற்சியை மேற்கொண்டாலும், சில காரணங்களால் அந்த படங்களால் எதிர்பார்த்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்த முடிவதில்லை.

சமூக வலைதளங்கள் ஆற்றும் பங்கு

சமூக ஊடக வலைதளங்கள் பெருகிவிட்ட இந்த காலத்தில் மீம்ஸ்கள், குறும்படங்கள் மற்றும் திரை விமர்சனங்கள் ஆகிய காரணங்களால் பல படங்கள் தோல்வியை சந்திக்கின்றன. சில படங்கள் நல்ல உள்ளடக்கத்துடன் இருக்கும் போதிலும் போதிய விளம்பரமின்மை அல்லது படம் குறித்து சரியாக ப்ரோமோஷன் செய்யாதது ஆகிய காரணங்களால் படங்கள் தோல்வியை சந்தித்துள்ளன. பல படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது, சில படங்களின் தோல்விக்கு காரணமாக அமைகிறது. மேலும் திரையரங்குகளில் விற்கப்படும் அதிக டிக்கெட் விலை காரணமாக குடும்பத்துடன் படம் பார்க்க செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

திரையரங்குக்கு செல்ல யோசிக்கும் மக்கள்

பணவீக்கம் காரணமாக மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளதால் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு சென்று செலவு செய்ய மக்கள் யோசிக்கின்றனர். இதனால் மிகவும் ஈர்க்கக்கூடிய, பாசிட்டிவ் விமர்சனங்களை பெறக்கூடிய படங்களுக்கு மட்டுமே மக்கள் திரையரங்கிற்கு வருகின்றனர். முன்பெல்லாம் பெரிய நட்சத்திரம் நடித்தால் படம் ஓடிவிடும் என்கிற எண்ணம் அனைவரிடமும் இருந்தது. ஆனால் சமீபகாலமாக இந்த நிலை மாறத்தொடங்கியுள்ளது. ரஜினிகாந்த், கமல், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் கூட கதையை தேர்வு செய்வதில் குறைபாடுகள் இருந்ததால் இவர்களின் படங்களை ரசிகர்கள் புறந்தள்ளி இருக்கின்றனர்.

இயக்குனர்களுக்கு பாடம் கற்பித்த ரசிகர்கள்

தமிழ் சினிமாத்துறைக்கு ரசிகர்கள் தற்போது பாடம் கற்றுக் கொடுத்து வருகின்றனர். நட்சத்திர அந்தஸ்து, பிரம்மாண்டம் மட்டுமே ஒரு படத்திற்கு வெற்றியை தேடி தந்து விடாது. வலுவான கதைக்களம், புதுமையான திரைக்கதை, சிறந்த இயக்கம், பார்வையாளர்களை ஈர்க்கும் அல்லது சிந்திக்கத் தூண்டும் வகையிலான உள்ளடக்கம் ஆகியவை தான் ஒரு படத்திற்கு வெற்றியைத் தரும் என்பதை ரசிகர்கள் இயக்குனர்களுக்கு உணர்த்தியுள்ளனர். தமிழ் திரையுலகம் இந்த புதிய சவால்களை எடுத்துக்கொண்டு தரமான உள்ளடக்கம் கொண்ட படங்களை உருவாக்க வேண்டும் என்பதே பெரும்பாலான ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

வேட்டியே அவிழும் அளவுக்கு ஆட்டம் போட்டபடி இளையராஜா கம்போஸ் பண்ணிய ஜாலியான பாடல் பற்றி தெரியுமா?
துரந்தர் விமர்சனம் : ரன்வீர் சிங்கின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? இல்லை வேஸ்டா?