விமர்சனம் ‘விஸ்வாசம்’ ஒரு டைரக்டரோட படமா பார்த்தா சர்வநாசம்...

By Muthurama LingamFirst Published Jan 10, 2019, 5:21 PM IST
Highlights

உடனே திருமணம், டூயட், ஒரு பெண்பிள்ளை என்று போகும் வாழ்க்கையில் ஸ்க்ரிப்டில் ட்விஸ்ட்டாக விதி விளையாடுகிறது. வில்லன்களுடன் அஜீத் மோதும் ஒரு முரட்டுச் சண்டையில் குழந்தைக்கு அடிபட்டுவிட அஜீத்தை ‘என் முகத்தில் முழிக்காதே’ என்று கூறி மும்பைக்கு ஷிஃப் ஆகிவிடுகிறார் நயன். பனிரெண்டு வருடங்கள் பிரிந்து வாழ்கிறார்கள்.

முதல் படத்தில் ஹிட் கொடுத்து அடுத்தடுத்து தொடர்ந்து இரண்டு சுமார் படங்களைக் கொடுத்த இயக்குநர், நான்காவது படத்திலாவது மறுபடியும் ஒரு ஹிட் கொடுப்பாரா என்ற  அஜீத்தின் நப்பாசையில் உருவான படம் ‘விஸ்வாசம்’. கதைக்கும் டைட்டிலுக்கும் படத்தில் ஒரு சம்பந்தமும் இல்லாததில் சிவா அஜீத்துக்குக் காட்டிய விஸ்வாசம்  என்று சம்பந்தப்படுத்திக்கொள்வதைத் தவிர வேறுவழியில்லை.

கதை? 1987, 88களில் வந்திருக்கவேண்டிய அரதப் பழசான கதை. கொடுவிலார்ப்பட்டியின் கொடுமைக்கார அடிதடிப் பார்ட்டி அஜீத். அவருக்கு ஜிங் ஜாக் அடிப்பதற்கென்றே தம்பி ராமையா, ரோபோ ஷங்கர். இந்த கொடுவிலார்பட்டிக்கு மருத்துவ கேம்ப் அமைக்க வருகிறார் சில கிளாமரான நர்சுகளுடன் வருகிறார் நயன்தாரா. துவக்கத்தில் அஜீத்தின் முரட்டுத்தனத்தைப் பார்த்து போலீஸில் புகார் கொடுக்கும் அளவுக்குப்போகும் அவர், அடுத்த சப்பையான இரண்டே காட்சிகளில் சரண்டராகி, மும்பை போய் அப்பாவை அழைத்து அஜீத்தை மாப்பிள்ளை பார்க்கிறார்.

உடனே திருமணம், டூயட், ஒரு பெண்பிள்ளை என்று போகும் வாழ்க்கையில் ஸ்க்ரிப்டில் ட்விஸ்ட்டாக விதி விளையாடுகிறது. வில்லன்களுடன் அஜீத் மோதும் ஒரு முரட்டுச் சண்டையில் குழந்தைக்கு அடிபட்டுவிட அஜீத்தை ‘என் முகத்தில் முழிக்காதே’ என்று கூறி மும்பைக்கு ஷிஃப் ஆகிவிடுகிறார் நயன். பனிரெண்டு வருடங்கள் பிரிந்து வாழ்கிறார்கள்.

இந்த ஃப்ளாஷ்பேக் முடிந்து மனைவியைப் பார்த்து சமாதானம்  செய்ய மும்பை செல்லும் அஜீத், அங்கு தனது செல்ல மகளின் உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்கிறார். ‘அவ கிட்ட நீதான் அப்பான்னு சொல்லாம பாதுகாப்பு கொடுக்கணும்’ என்று நயனிடன் அனுமதி பெற்று மகளைப் பாதுகாத்து ஓட்டப்பந்தயத்தில் தேசிய அளவில் சாதிக்க விரும்பும் மகளுக்கு பூந்தோட்ட காவல்காரனாய் மாறுகிறார்.

’பேட்ட’ படத்தில் பெரியவர் வேடத்தில் வரும் ரஜினியே கருப்புக் கலர் டை அடித்து இளமை காட்டத்துடிக்கும் நிலையில், முழுக்க நரைத்த தாடியும் மீசையுமாய் பேரழகனாய் வருகிறார் அஜீத். அத்துடன் இந்தப்படத்தில் மகள் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நிஜமாகவே கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார்.

உண்மையில் இது ஒரு நயன்தாரா படம்தான். இரண்டாவது பாதியில் அஜீத் டம்மியாகிவிட ஹீரோ ரோலுக்கு மாறி, மகளைக் கறாராகப் பாதுகாப்பதிலாகட்டும், அஜீத்திடம் காட்டும் கெடுபிடியாகட்டும் நயன் இஸ் வெரி ஃபைன். இவர்களது மகள் ஸ்வேதாவாக வரும் அனிகா செம ஸ்மார்ட். மிரளும் விழிகளுடன் நீ காட்டும் எக்ஸ்பிரசன்களுக்கு தனியாக ஒரு பூங்கொத்து மகளே.

காமெடி என்ற பெயரில் தம்பி ராமையா, ரோபோ சங்கர், இடைவேளைக்கு அப்புறம் விவேக் ஆகியோர் அடிக்கும் கூத்துகள் அரதப்பழசு. அதிலும் ஓல்ட் கெட் அப் என்ற பெயரில் அவர்களது தலைமுடிக்கு அடிக்கப்பட்டிருக்கும் வெள்ளை பெயிண்ட் ஆண்டவா எத்தனை வருஷத்துக்கு பின்னால இருக்கீங்க பாஸ்.

அஜீத்தை இவ்வளவு பேரழகனாகக் காட்டியதில் பெரும் பங்கு ஒளிப்பதிவாளர் வெற்றிக்குரியது. கண்ணில் ஒற்றிக்கொள்ளவேண்டிய ஒளிப்பதிவு. இசை டி.இமான். படத்துக்கு ஒரு குட்டி எமன்.

கதை வசனம், உதவி ஒத்துழைப்பு, இணை, துணை என்று ஏகப்பட்ட கார்டுகள் போடுகிறார்கள். ஒரு சில பஞ்ச் டயாக்குகளைத் தாண்டி யோசித்தால் துவக்கத்தில் 87, 88 களில் வந்திருக்கவேண்டிய கதைதான் என்பதை விஸ்வாசம் ஸ்க்ரிப்டில் அடித்து சத்தியம் செய்யலாம்.

சரியாக 2 மணிநேரம் 32 நிமிடங்கள் ஓடும் இப்படத்தை, 6 பாடல்கள், ஆறு ஃபைட்களால் ஸ்டண்ட் மாஸ்டரும், டான்ஸ் மாஸ்டர்களும் சுமார் ஒரு மணி நேரம் எடுத்துக்கொண்டது போக பாதிப்படத்தை மட்டுமே சிவா இயக்கியிருக்கிறார். அதிலும் மும்பை பகுதிகள் தவிர்த்துப் பார்த்தால்,  வேறுன்  எதுவும் தேறாமல், அஜீத் தந்த நான்காவது வாய்ப்பை சர்வநாசம் செய்திருக்கிறார் என்றே தோணுகிறது.
 

click me!