Ponniyin Selvan Review: 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் எப்படி இருக்கிறது? விமர்சனம் இதோ..!

By manimegalai a  |  First Published Sep 30, 2022, 10:08 AM IST

இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்ததா? என்பது குறித்து இந்த விமர்சனத்தில் பார்ப்போம்.
 


பொன்னியின் செல்வன் கதை:

தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜா ராஜ சோழனின்... வரலாற்று சுவடுகளோடு புனையப்பட்ட கதைகளுடன் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை, தழுவி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் 'பொன்னியின் செல்வன்' பாகம் 1. சுமார் 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களோடு... 5 பாகங்களாக உள்ள இந்த நாவலை பல பிரபலங்கள் படமாக எடுக்க முற்பட்ட நிலையில், அவர்கள் எண்ணம் நிறைவேறாமல் போனது. ஆனால் தற்போது 'பொன்னியின் செல்வன்' கதையை படமாக இயக்க வேண்டும் என்பதை கனவாக கொண்டு, சுமார் 2 வருட உழைப்பிற்கு பின்னர், பிரமாண்ட நட்சத்திர பட்டாளத்தை கொண்டு இந்த படத்தை 2 பாகங்களாக இயக்கி முடித்துள்ளார் மணிரத்னம்.

Tap to resize

Latest Videos

இந்த படத்தின் கதைக்குள் செல்வதற்கு முன்பாக இதில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்கள் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.

பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள்:

வாணர்குலத்து வல்லவரையன் வந்தியத்தேவன்
அருண்மொழி வர்மன் என்கிற இராசராச சோழர்
ஆழ்வார்க்கடியான் நம்பி என்கிற திருமலையப்பன்
குந்தவை பிராட்டியார் (சுந்தரசோழரின் மகள்)
பெரிய பழுவேட்டரையர்
நந்தினி
சின்ன பழுவேட்டரையர்
ஆதித்த கரிகாலர்
சுந்தர சோழர்
செம்பியன் மாதேவி
கடம்பூர் சம்புவரையர்
சேந்தன் அமுதன்
பூங்குழலி
குடந்தை சோதிடர்
வானதி
மந்திரவாதி இரவிதாசன் (பாண்டியனுடைய ஆபத்துதவிகளின் தலைவன்)
கந்தமாறன் (சம்புவரையர் மகன்)
கொடும்பாளூர் வேளார்
மணிமேகலை (சம்புவரையர் மகள்)
அநிருத்த பிரம்மராயர்
மதுராந்தக சோழர்
பார்த்திபேந்திர பல்லன்

படத்தின் கதை துவக்கம்...

 

கமலஹாசனின் குரலில் கதை குறித்த விளக்கத்துடன் இந்த படம் துவங்குகிறது. ஆதித்த கரிகாலனான விக்ரம், தன்னுடைய படைகளுடன் ராஷ்டிர நாட்டில் போரிட்டு வென்று தன்னுடைய சோழ நாட்டின் கொடியை நாட்டுகிறார். இந்த போரில் கரிகாலனுடன் இணைந்து போரிட்ட நண்பனாக மட்டும் இல்லாமல், கரிகாலனின் நம்பிக்கைக்கு உரியவனாகவும் உள்ளார் வந்திய தேவன் (கார்த்தி).

போரில் வெற்றி கண்ட கொண்டாட்டத்தை கொண்டாடிக்கொண்டிருக்கும் , வந்திய தேவனை அழைக்கும் கரிகாலன் தன்னுடைய வீரவளை வந்தியத்தேவனிடம் கொடுத்து... சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்கிறார். வந்திய தேவனின் இதற்கான சுவாரஸ்ய பயணமே பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் இடம்பெற்றுள்ள பெருவாரியான கதை என கூறலாம்.

வந்திய தேவனின் பயணம்:

 

வந்திய தேவன் பொன்னி நாடு நோக்கி செல்லும் போது இடம்பெறும் பாடலே... பொன்னி நதி பாடல். இதை தொடர்ந்து, இந்த பாடல் முடிந்த பின்னர் வந்திய தேவன் காணும் இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள் தான் 
ஆழ்வார்க்கடியான் நம்பி (ஜெயராம்). மற்றும் பெரிய பழுவேட்டரையர் (சரத்குமார்). 

ஆழ்வார்க்கடியனுடன், வந்தியத்தேவன் இடம்பெறும் காட்சிகள் திரையரங்கையே சிரிப்பில் மூழ்க செய்கிறது. மேலும், குறுநில மன்னரான பெரிய பழுவேட்டரையர்,  இளம் பெண்ணான நந்தினியை திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார். சுந்தரசோழரின் மகனான, கரிகாலனும், பொன்னியின் செல்வனும் ராஜ பட்டத்தை பெற கூடாது என்பதில் மிக தெளிவாக இருக்கும், பெரிய பழுவேட்டரையர், மற்றும் சின்ன பழுவேட்டரையர் (பார்த்திபன்) ஆகியோர், மதுராந்தக சோழரை (ரகுமான்) அரசனாக்க சதி திட்டம் தீட்டுகிறார்கள்.

 

இதனை மறைந்து நின்று பார்த்துவிடும் வந்திய தேவன், மற்றும் ஆழ்வார்கடியன் பார்த்து விடுகிறார்கள். இது குறித்து, குந்தவையை சந்தித்து இந்த சதி குறித்து தெரிவிக்கிறார் வந்திய தேவன். ஒருபுறம் நந்தினி (ஐஸ்வர்யா ராய்)  தன்னுடைய கணவன் வீர பாண்டியனை கொன்ற ஆதித்த கரிகாலனை கொல்லத் துடிப்பதையும், மற்றொரு புறம்  அருண்மொழி வர்மனை (ஜெயம் ரவியை) கொலை செய்ய பாண்டியர்களை அனுப்புகிறார் நந்தினி. அதே நேரம் புறம் குந்தவை தன்னுடைய இளைய சகோதரன் அருண் மொழி வர்மனை தன்னிடம் அழைத்து வருமாறு வந்திய தேவனை இலங்கைக்கு அனுப்புகிறார்.

மற்றொரு புறம் கரிகாலனும் பார்த்திபனை விட்டு அருமொழி வர்மனுக்கு அழைப்பு விடுகிறார்... எப்படியும் தன்னுடைய மகன் பத்திரமாக தஞ்சைக்கு வர வேண்டும் என்கிற நோக்கத்தில் சுந்தர சோழன் (பிரகாஷ் ராஜ்) மகனை சிறைபிடித்து கொண்டு வர படையை அனுப்புகிறார். எனவே யாருடன் பொன்னியின் செல்வன் செல்வார் என மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மிகப்பெரிய ட்விஸ்ட் ஒன்றும் கார்த்திருக்கிறது.

கரிகாலனை தேடி செல்லும் குந்தவை:

 

கரிகாலனை உன்னால் மட்டுமே சமாளிக்க முடியும் என, சுந்தர சோழன் குந்தவையை அவர் இருக்கும் இடத்திற்கு அனுப்புகிறார். அப்போது தான் நந்தினி கரிகாலனை விட்டு பிரிந்து சென்றதற்கான காரணம், கரிகாலனுக்கும் - நந்திக்கும் உண்டான பகை குறித்த பல தகவல்கள் வெளியாகிறது. தன்னுடைய கணவனை கொன்ற கரிகாலனை மட்டும் இன்றி... பொன்னியின் செல்வனையும் கொலை செய்ய வேண்டும் என துடிக்கிறார் நந்தினி. மேலும் சில காட்சிகளில் சோழ அரசியாக அரியணை எற வேண்டும் என்கிற நந்தினியின் ஆசையும் வெளிப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

பொன்னியின் செல்வன் திட்டம்:

பொன்னியின் செல்வன் தன்னை சிலர் கொலை செய்ய தேவதை அறிந்து எதிராளியை ஏமாற்றுவதற்காக  தன்னுடைய மணி முடியை வந்திய தேவனுக்கு அணிவித்து தன்னை கொலை செய்ய திட்டமிடுபவர்களை ஏமாற்றுகிறார். அதே நேரம் வந்திய தேவன் பாண்டியர்களால் சிறைபிடிக்கப்பட்டு கப்பலில் கொண்டு செல்லப்படுகிறார். அது குட்டி புலி அருண் மொழி வர்மன் இல்லை என்பதை தெரிந்து வந்திய தேவனோடு மீண்டும் கரைக்கு திரும்புகிறது கப்பல். வந்திய தேவனை காப்பாற்ற கொலை வெறியில் துடித்துக்கொண்டிருக்கும், பாண்டியர்களின் கப்பலுக்கே செல்லும் பொன்னியின் செல்வன்... கப்பல் உடைத்து கடலில் விழும் சூழல் ஏற்படுகிறது.

காப்பாற்றப்படும் பொன்னியின் செல்வன்:

 

பொன்னியின் செல்வனுக்கு என்ன ஆனது என சோழர்கள் துயிர் உற்ற நேரம்... கரிகாலன் மீண்டும் வீர சாகசம் செய்து போரில் இறங்கிய தருணம்... அடுத்து என்ன நடக்க போகிறது என்கிற ட்விஸ்டுடன் இந்த படத்தை நிறைவு செய்துள்ளார் மணிரத்னம். படத்தின் முடிவிலும் மிகப்பெரிய அதிர்ச்சி கார்த்திருக்கிறது அதை திரையரங்கில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த படத்தின் பிளஸ்:

படத்தின் பின்னணி  இசை, தோட்டா தரணியின் பிரமாண்ட செட், பாடல்கள், பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட கதாபாத்திரங்கள், 5 பாகம் கொண்ட ஒரு நாவலை முடிந்த வரை விளக்கமாகவே சொல்ல முற்பட்டுள்ள மணிரத்தினத்தின் முயற்சி போன்றவை இந்த பதின் மிகப்பெரிய ப்ளஸ் என்றே கூறலாம். அதே போல் ரவி வர்மனின் ஒளிப்பதிவு அபாரம். 

படத்தின் மைனஸ்:

படத்தின் நீளம் சற்று போர் அடிக்க வைக்கிறது. படம் விறுவிறுப்பாக செல்லாமல் கொஞ்சம் பொறுமையாக நகர்வது போல் தெரிவது மிகப்பெரிய மைனஸ். சில இடங்களில் படத்தின் தொடர்ச்சி மிஸ் ஆவது போல் தெரிகிறது. 5 பாகம் கொண்ட நாவலை இப்படி தான் இயக்க முடியும் என்பது மனதிற்கு தெரிந்தாலும்... பார்வையாளர்களுக்கு அது சிறு சலிப்பை ஏற்படுத்தும் விதத்திலேயே உள்ளது. அதே நேரத்தில் தன்னுடைய நேர்த்தியான இயக்கத்தால் பொன்னியின் செல்வன் படத்தை மிகவும் நேர்தியாகவே இயக்கியுள்ளார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

click me!