தொடர் சிகிச்சைக்குப் பின்னர் போதிய வசதி இல்லாத காரணத்தால் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட வடிவேல் பாலாஜி இன்று காலமானார்.
விஜய் தொலைக்காட்சி ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற காமெடி நிகழ்ச்சி கலக்கப்போவது யாரு. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் மூலம் அறிமுகமானவர் வடிவேல் பாலாஜி. அச்சு அசலாக கெட்டப்பில் மட்டுமல்லாது, மாடுலேஷன், டைலாக் டெலிவரி, பாடி லாங்குவேஜ் என அப்படியே வடிவேலுவை கண்முன் காட்டியவர். அந்த நிகழ்ச்சியில் அவர் வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர்களின் மனதில் தனது காமெடியால் தனி இடம் பிடித்தார்.
அந்த நிகழ்ச்சியை முடித்த கையோடு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த “அது இது எது” நிகழ்ச்சியின் சிரிச்சா போச்சு போர்ஷனில் பங்கேற்று கலக்கினார். அதன் பின்னர் கடைசியாக விஜய் தொலைக்காட்சி தொகுத்து வழங்கிய பல காமெடி நிகழ்ச்சிகள் வடிவேல் பாலாஜி இல்லாமல் ஒளிபரப்பானதே கிடையாது. காமெடி ஷோ என்றாலே வடிவேலு பாலாஜி எங்கே என ரசிகர்கள் தேடும் அளவிற்கு புகழ் பெற்றார்.
ஆரம்பத்தில் பிணவறையில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படும் பாலாஜி, பின்னாளில் சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையிலும் ஜொலிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் 15 நாட்களுக்கு முன்னர் திடீர் மாரடைப்பு காரணமாக இரு கைகளும் வாதம் ஏற்பட்டு முடங்கி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
தொடர் சிகிச்சைக்குப் பின்னர் போதிய வசதி இல்லாத காரணத்தால் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட வடிவேல் பாலாஜி இன்று காலமானார். 45 வயதான வடிவேலு பாலாஜிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். காமெடி புயலாக விஜய் டி.வி.யில் அசத்திய வடிவேல் பாலாஜியின் திடீர் மரணம் ரசிகர்களையும், திரைப்பிரபலங்களையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.