விஜய் படத்தை வைத்து பண மோசடி... பிரபல இயக்குநர் மீது பரபரப்பு புகார்...!

By Kanimozhi PannerselvamFirst Published Sep 10, 2020, 12:35 PM IST
Highlights

அவருடைய பேச்சை நம்பிய சுந்தர் தனது வீட்டை விற்று அதிலிருந்து கிடைத்த ரூ.23 லட்சத்தை சாலிகிராமத்தில் உள்ள சக்தி சிதம்பரம் அலுவலகத்தில் கொடுத்துள்ளார். 

நடிகர் விஜய் நடிப்பில் 2011ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் காவலன். இந்த படத்தை மொத்த விநியோகம் செய்யப்போவதாக கூறி இயக்குநர் சக்தி சிதம்பரம், சென்னை அடையாறைச் சேர்ந்த சுந்தர் என்பவரிடம் ரூ.23 லட்சம் கடனாக பெற்றுள்ளார். ஒரு மாதத்தில் அந்த பணத்தை ரூ.24 லட்சமாக திருப்பி தருவதாகவும் சக்தி சிதம்பரம் வாக்கு கொடுத்துள்ளார். 

அவருடைய பேச்சை நம்பிய சுந்தர் தனது வீட்டை விற்று அதிலிருந்து கிடைத்த ரூ.23 லட்சத்தை சாலிகிராமத்தில் உள்ள சக்தி சிதம்பரம் அலுவலகத்தில் கொடுத்துள்ளார். ஆனால் சக்தி சிதம்பரம் கூறியது போல் காவலன் படத்தின் விநியோக உரிமையை வாங்கவில்லை. இதுகுறித்து தகவலறிந்த சுந்தர், அவரிடம் சென்று தனது பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் சக்தி சிதம்பரமோ பணத்தை தராமல் இழுத்தடித்துள்ளார். 

தொடர்ந்து பணம் கேட்டு நச்சரித்து வந்த சுந்தரத்திடம் சக்தி சிதம்பரம் 5 முறை ரூ.4 லட்சம் மற்றும் ரூ.5 லட்சத்திற்கான காசோலைகளை கொடுத்துள்ளார். ஆனால் அவையும் வங்கி கணக்கில் பணம் இல்லாத காரணத்தால் திரும்பி வந்துள்ளது. மேலும் நேரில் சென்று கடனை திருப்பி கேட்ட போது சுந்தரையும், அவருடைய குடும்பத்தினரையும் கொன்றுவிடுவேன் என சக்தி சிதம்பரம் மிரட்டியுள்ளார். 

இதையடுத்து சக்தி சிதம்பரம் மீது பண மோசடி, கொலை மிரட்டல் ஆகிய புகார்களை சுந்தர் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணைக்காக வரும் சனிக்கிழமை நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பியுள்ளனர். 

click me!