
கடந்த இரு மாதங்களாக, வெள்ளிக்கிழமை ஜெய்சங்கர் மாதிரி, வாராவாரம் படங்களை வெளியிட்டு தாங்கமுடியாத அன்புத்தொல்லைகளை தந்துகொண்டிருந்த விஜய் சேதுபதியின் படங்கள் எதுவும் இந்த நவம்பர் மாதத்தில் ரிலீஸாகாது.
அவர் திருநங்கையாக நடித்திருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ மற்றும் ‘சீதக்காதி’ படங்கள் அனைத்துப்பணிகளும் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில் ‘சீதக்காதி’ படம் வரும் 16ம் தேதி ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இனி வாரத்திற்கு ஒரு முறையாவது சிறுபடங்களுக்கு முற்றிலும் வழிவிட்டு பெரிய படங்கள் அடுத்தடுத்த வாரங்களில்தான் ரிலீஸாக வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் இயற்றியுள்ள நிலையில் வரும் 16ம் தேதி ரிலீஸாகவுள்ள உதயாவின் ‘உத்தரவு மகாராஜா’ படத்துக்கு வழிவிட்டு விஜய் சேதுபதியின் படம் ஒதுங்கிக்கொண்டது.
இதே போல் அதே தேதியில் ரிலீஸாவதாக இருந்த ‘அடங்க மறு’ படமும் மறு தேதி அறிவிக்கப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எனவே 16 ம் தேதி பெரிய ஹீரோக்களின் போட்டியின்றி ‘உத்தரவு மகாராஜா’ உள்ளிட்ட ஒன்றிரண்டு சிறு பட்ஜெட் படங்கள், முதல்முறையாக அதிக தியேட்டர்களில் வெளியாகக்கூடும் என்று நம்பப்படுகிறது.
இதெல்லாம் கதையா என்று கமெண்ட் அடிக்கிற படங்களாகவே நடித்துக்கொண்டிருக்கிற உதயா, பெருந்தன்மையுடன் தனது படத்திற்கு வழிவிட்டு ஒதுங்கிகொண்டதற்காக நடிகர்கள் விஜய் சேதுபதி,ஜெயம் ரவி இருவருக்கும் நன்றி தெரிவித்து ட்விட் பண்ணியுள்ளார். ...நன்றியெல்லாம் வேண்டாம் பாஸ். மனுசங்க பாக்குற மாதிரி ஒரே ஒரு படம் நடிச்சுருங்க. அது போதும்...என்று விஜய் சேதுபதியோ ஜெயம் ரவியோ பதில் கமெண்ட் போடவில்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.