உள்ளாட்சி தேர்தலில் அசத்திய விஜய் மகக்ள் இயக்கம்… நடிகர் விஜய் நேரடி அரசியலுக்கு வர அடித்தளம் என புகழாரம்..!

By manimegalai aFirst Published Oct 12, 2021, 5:59 PM IST
Highlights

மகக்ள் நீதி மய்யம், நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளே பெரிய பின்னடவை சந்தித்துள்ள நிலையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டவர்கள் வெற்றிவாகை சூடியுள்ளனர்.

மகக்ள் நீதி மய்யம், நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளே பெரிய பின்னடவை சந்தித்துள்ள நிலையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டவர்கள் வெற்றிவாகை சூடியுள்ளனர்.

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் காலை எட்டு மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆளும் கட்சியாக உள்ள திமுக அனைத்து மாவட்டங்களிலும் பெருவாரியான இடங்களை கைப்பற்றியுள்ளது. எதிர்க்கட்சியான அதிமுக-க்கு படுதோல்வியாய் அமைந்துள்ளது.

பல வருடங்களாக சீமான் நடத்திவரும் நாம் தமிழர் கட்சி, விஜயகாந்தின் தே.மு.தி.க., தேர்தல் களத்தில் அனுபவம் பெற்றுவிட்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன. இந்தநிலையில் தான் நடிகர் விஜய் ரசிகர்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கடந்த சில வருடங்களாக வலியுறுத்தி வருகின்றனர். ரஜினி கடைசி நேரத்தில் பின்வாங்கியது உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகளை உற்றுநோக்கிய விஜய், தற்போதைக்கு அரசியல் குறித்து எந்த முடிவையும் அறிவிக்காமலே காலம் கடத்தி வருகிறார். இதனிடையே தந்தை உடன் ஏற்பட்ட மோதலில் விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் விஜய் தலைமையிலான விஜய் மக்கள் இயக்கம் தொடர்ந்து செயல்படுவதாகவும் கூறப்பட்டது.

அரசியலுக்கு வர வேண்டும் என்று ரசிகர்களின் கோரிக்கைக்கு பொறுமை காக்குமாறு கூறிவந்த நடிகர் விஜய், தற்போது ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தமது ரசிகர்கள் போட்டியிட அனுமதி வழங்கினார். அத்துடன் விஜய் மக்கள் இயக்கத்தின் கொடியையும் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தினார். உற்சாகத்தோடு களத்தில் இறங்கிய ரசிகர்கள் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டனர்.

விஜய் ரசிகர்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் தேர்தல் முடிவுகளில் கிடைத்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் 49 பேர் வார்டு உறுப்பினர்கள் பதவிகளை கைப்பற்றியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மாமண்டூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டில் வடபாதியை சேர்ந்த ரீனா புருஷோத்தமன் என்பவர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் கருப்படித்தட்டை அடுத்த காந்திநகர் 1-வது வார்டு உறுப்பினர் பதவியை ஒரு வாக்கு வித்தியாசத்தில் விஜய் ரசிகர் மன்ற நகர செயலாளர் கைப்பற்றியுள்ளார். அரசியல் கட்சிகளால் சாதிக்க முடியாததை மக்கள் இயக்கம் மூலம் விஜய் ரசிகர்கள் சாதித்து காட்டியுள்ளனர். நடிகர் விஜய் நேரடி அரசியலுக்கு வருவதற்கான அடித்தளமாக இந்த வெற்றி பார்க்கப்படுகிறது. தேர்தல் வெற்றியை சமூக வலைதளங்களில் கொண்டாடும் ரசிகர்கள், தளபதி விஜய் இனியும் தாமதிக்காமல் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

click me!