
ஹிந்தி திரை உலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வித்யா பாலன். இவர் பம்பாயில் தமிழ் பிராமண குடும்பத்தில் பிறந்தவர். வித்யா பாலனுக்கு தமிழ், மலையாளம் இரண்டும் சரளமாக பேசத் தெரியும். மும்பையில் பிறந்ததால் ஹிந்தியும் அவருக்கு அத்துபடி. சிறுவயதிலிருந்தே வித்யா பாலனுக்கு நடிப்புத் துறை மீது ஆர்வம் இருந்தது. தனது 16-வது வயதிலேயே ஏக்நாக் கபூரின் நகைச்சுவை தொடர் ஒன்றில் நடித்தார். அதன் பின்னர் படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கிய அவர், கல்லூரிப் படிப்பை முடித்தார். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதே மோகன்லாலுக்கு ஜோடியாக மலையாள படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தை தொடர்ந்து 12 மலையாள படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன் பின்னர் 2001 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகம் பக்கம் தலை காட்டத் தொடங்கினர்.
மாதவன் நடிப்பில் வெளியான ‘ரன்’ படத்தில் மாதவனுக்கு ஜோடியாக முதலில் கமிட்டானது வித்யா பாலன் தான் ஆனால் அவர் நீக்கப்பட்டு பின்னர் மீரா ஜாஸ்மினை கொண்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அதேபோல் 2022 ஆம் ஆண்டு ஷியாம் ஹீரோவாக நடித்த ‘பாலா’ படத்தில் நடிக்க வித்யா பாலன் ஒப்பந்தமானார். பின்னர் அவர் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக இந்த படத்திலும் மீரா ஜாஸ்மினே நடித்தார். தமிழில் இவர் அறிமுகமான முதல் இரண்டு படங்களிலுமே இவர் நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் ‘மனசெல்லாம்’ படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமானார். ஒரு வாரம் படப்பிடிப்பு நடந்தது. வித்யா பாலன் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு முடிந்ததும் எடுக்கப்பட்ட காட்சிகளை எடிட் செய்து பார்த்தபோது, வித்யா பாலனின் நடிப்பு திருப்திகரமாக இல்லை என படக்குழுவினர் கருவினர். இதனால் அவரை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக திரிஷாவை ஒப்பந்தம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து மலையாளத்தில் மோகன்லாலுடன் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்த ‘சக்கரம்’ படமும் கைவிடப்பட்டது. தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகள் கைநழுவிப் போனதால் வித்யா பாலன் ‘ராசியற்ற நடிகை’ என்று முத்திரை குத்தப்பட்டார். ‘மனசெல்லாம்’ படத்தில் நடித்த கொண்டிருந்தபோது வடபழனியில் ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கி இருந்தார். படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் அவர் அறைக்குச் செலுத்த வாடகையும், பிற செலவுகளையும் அவரே ஏற்றதாக கூறப்படுகிறது. இது அவருக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. இந்த சம்பவங்களால் வித்யா பாலன் பெரும் வேதனையும், அவமானமும் அடைந்தார். சினிமா வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே அவர் பல புறக்கணிப்புகளையும், ராசியற்ற நடிகை என்ற விமர்சனங்களையும் சந்தித்தார். இந்த நாட்கள் வித்யா பாலனின் வாழ்க்கையில் கடினமான காலகட்டமாக இருந்தன.
இருப்பினும் இந்த தோல்விகளை அனைத்தும் புறந்தள்ளிய அவர், ஒவ்வொரு படிக்கட்டுகளாக ஏறி, தனது கடினமான உழைப்பாலும், திறமையாலும் ஹிந்தி திரைஉலகில் ஒரு முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். இன்று அவர் தேசிய விருதுகள் மற்றும் ஃபிலிம்பேர் விருதுகளையும் பெற்ற நடிகையாக விளங்கி வருகிறார். தொடர்ந்து தான் ஒப்பந்தமான படங்களில் இருந்து நீக்கப்பட்டதால் இனி தமிழ் சினிமா பக்கமே வரக்கூடாது என வித்யா பாலன் முடிவெடுத்திருந்தாராம். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.