’சீமான் என்பது தமிழ்ப் பெயரே அல்ல’...புதுப் புரளி கிளப்பும் விசிக வன்னி அரசுவின் 10 கேள்விகள்...

By Muthurama LingamFirst Published Oct 19, 2019, 9:47 AM IST
Highlights

அதே நிகழ்ச்சியில் பாஜகவுக்காக மும்பையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பப்பட்டபோது, “ புதுக்கோட்டையை சார்ந்த தமிழர் தான் கேப்டன் தமிழ்ச்செல்வன். அதனால் பரப்புரை செய்தேன்” என்றார் அண்ணன் சீமான்.தமிழர் தான் அளவுகோல் என்றால், நாங்குநேரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் திரு.ரூபி மனோகரன் வடக்கிந்தியரா? தமிழர்தானே அவருக்கு அது பொருந்தாதா?

“இலை மலர்ந்தால் ஈழம் மலரும்”என்று தேர்தல் பரப்புரை செய்தீர்கள். இங்கே இலை மலர்ந்தது; அங்கே ஈழம் மலர்ந்ததா?” என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு,’இது பைத்தியக்காரத்தனமான கேள்வி’என்று நிகழ்ச்சியை விட்டு வெளிநடப்பு செய்யாத குறையாகக் கோபித்துக்கொண்ட நாம் தமிழர் சீமானுக்கு தனது முகநூல் பக்கத்தில் 10 சூடான கேள்விகள் கேட்டிருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு.

1. பைத்தியக்காரத்தனம் என்று சொன்னது அதிமுவுக்கு தேர்தல் பரப்புரை செய்ததையா?அல்லது இப்படி கேள்வி கேட்பதே பைத்தியக்காரத்தனமா?

2.அதே நிகழ்ச்சியில் பாஜகவுக்காக மும்பையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பப்பட்டபோது, “ புதுக்கோட்டையை சார்ந்த தமிழர் தான் கேப்டன் தமிழ்ச்செல்வன். அதனால் பரப்புரை செய்தேன்” என்றார் அண்ணன் சீமான்.தமிழர் தான் அளவுகோல் என்றால், நாங்குநேரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் திரு.ரூபி மனோகரன் வடக்கிந்தியரா? தமிழர்தானே அவருக்கு அது பொருந்தாதா?

3. தமிழர் தான் அடிப்படை அளவுகோல் என்றால், தமிழ்நாட்டிலிருக்கும் காங்கிரஸ் கட்சியிலிருப்பவர்கள் தமிழர்களா அல்லது வடக்கவர்களா?
தமிழ்நாட்டிலிருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இந்திய அமைதிப்படைக்கும் என்ன சம்மந்தம்?

4. இனப்படுகொலை செய்துவிட்டு இந்தியா திரும்பிய அமைதிப்படையை தெருத்தெருவாக மாலை போட்டு வரவேற்ற அய்யா ம.பொ.சிவஞானம் கிராமணியாரை ‘நாம் தமிழர்’என்று புகழ் வணக்கம் செலுத்துவதன் ‘உள்நோக்கம்’என்ன?

5. இனப்படுகொலை செய்த இந்திய அமைதிப்படையை வரவேற்கவே போகமாட்டேன் என்று சொன்ன அய்யா கலைஞர் அவர்களை ‘துரோகி’ என்று சொல்வதன் அரசியல் என்ன?

6. இந்திய அமைதிப்படை செய்த இனப்படுகொலை தான் அடிப்படை கோபம் என்றால், ஏன் அய்யா ம.பொ.சி.கிராமணியார் மீது 
தங்களுக்கு கோபம் வரவில்லை?

7. பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு மரண தண்டனை கூடாது என்று தமிழகத்தில் மரண தண்டனை எதிர்ப்பு இயக்கம் நடைப்பெற்ற போது, அண்ணன் சீமான் மரணதண்டனைக்கு எதிராக முழங்கினார். மரண தண்டனைக்கு எதிரான அவரது கொள்கை உண்மையென்றால், எந்த மரணத்தையும், எந்த படுகொலைகளையும் எதிர்க்க வேண்டும் தானே? 

8. தேர்தல் பரப்புரையில் ஆளும் அதிகார வர்க்கமான அதிமுக- பாஜகவின் மக்கள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்தாமல், அதிகாரத்தில் இல்லாத காங்கிரசை பேசுவதன் உள்நோக்கம் என்ன? தூத்துக்குடியில் 15 பேரை சுட்டுக்கொன்ற கொலைகாரர்கள் தான் அதிமுக- பாஜக என்று நாங்குநேரியில் பரப்புரை செய்தீர்களா?

9. பாஜக- அதிமுக செயல்படுத்தி வரும் மக்கள் விரோத செயல்திட்டங்களை மக்கள் முன் அம்பலப்படுத்துவது தானே இப்போதைய தேவை. மாறாக,
திமுக- காங்கிரசை விமர்சிப்பதன் உள்நோக்கம் பாஜக- அதிமுகவுக்கு வாக்குகளை மாற்றுவதற்கு தானே?

10. தமிழில் ஆங்கிலம் கலந்தால் தோலை உரித்து உப்புகண்டம் போடுவேன் என்று சொல்லும் தாங்கள் தமிழகத்தின் தெருக்களில் எங்கெங்கும் ஆங்கிலப்பெயர் பலகைகள் தான் நிரம்பி வழிகின்றன.நீங்கள் தோலுரிக்கப்போவது அரசு நடத்தும் முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களையா அல்லது வணிக நிறுவனங்களையா?

ஓரே ஒரு ‘கொசுறு’கேள்வி, தமிழில் கலக்க கூடாது பச்சைத்தமிழில் தான் இருக்க வேண்டும் என்று சொல்லும் 
அண்ணன் சீமானின் பெயர் தமிழா?
 - வன்னி அரசு
                             

click me!