
கமல் போல நாமும் இனி, அரசியல் கொஞ்சம் சினிமா கொஞ்சம் சேர்ந்து செய்த கலவையாக செயல்பட்டால்தான் தமிழ் சமூகத்தின் பிரபலங்களுல் ஒருவராக நிகழ்காலத்திலும் இருக்கமுடியும். இல்லாவிட்டால் ’முன்ன ஒரு காலத்துல சீமான்னு ஒரு எழுச்சியான இளைஞர் இருந்தாரு’ என்று ஏடுகளில் எழுதிவிட்டு மறந்துவிடுவார்கள் என்று நினைத்து, இனி வருடத்தில் பாதி நாட்கள் சினிமாவுக்கு என்று முடிவெடுத்திருக்கிறார் சீமான்.
அரசியலில் காலடி எடுத்துவைத்த பிறகு சினிமாவை விட்டு முற்றிலும் ஒதுங்கியிருந்தார் சீமான். அவ்வப்போது நெருங்கிய தம்பிமார்களின் ஆடியோ நிகழ்ச்சிகளில் சற்று முழங்கிவிட்டுச் செல்வதோடு சரி. இடையில் ‘மிக மிக அவசரம்’ படத்தில் மட்டும் காவல்துறை உயர் அதிகாரியாய் சிறப்புத்தோற்றத்தில் தலைகாட்டியிருந்தார்.
கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில், குறிப்பாக கமலும், ரஜினியும் தங்கள் சினிமா எண்ட்ரியை அறிவித்த பிறகு, சீமானுக்கு அரசியலில் சற்று இறங்குமுகம்தான். ‘அவங்க ரெண்டு பேரும் சினிமாவுல இருந்துக்கிட்டே அரசியல் பண்ணும்போது, நாம ஏன் அரசியல்ல இருந்துக்கிட்டே சினிமா பண்ணக்கூடாது? என்று தம்பிமார்கள் தொடர்ந்து அன்புத்தொல்லை தரவே, ஒரே நேரத்தில் மூன்று அவதாரங்களுடன் அதாவது நடிகராக, தயாரிப்பாளராக, இயக்குநராக களம் இறங்கவிருக்கிறார் சீமான்.
தயாரிப்பாளராக இரண்டு மாதங்களுக்கு முன்பே கதை கேட்க ஆரம்பித்த சீமான் இப்போதைக்கு நான்கு புதுமுக இயக்குநர்களின் கதையை ஓ.கே செய்திருக்கிறார். அடுத்தபடியாக ‘கத்துக்குட்டி’ படத்தை இயக்கிய பத்திரிகையாளர் சரவணன் இயக்கும் படம் ஒன்றில் நாயகனாக நடிக்கிறார். டி.டி.வி. தினகரன் வட்டாரத்தில் செல்வாக்கு பெற்றவராகத் திகழும் சரவணன் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது பற்றிய விபரம் இன்னும் வெளிவரவில்லை.
இந்த செய்தியை ஆதாரமாகக் கொண்டு, வரும் தேர்தலில் தினகரனும் சீமானும் கூட்டணி சேர்வார்களா என்ற கேள்விகள் கிளம்பலாம். அப்படி ஒரு கூட்டணி வந்தாலும் வரலாம் யார் கண்டது?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.