நடிகை திரிஷா உள்ளிட்ட திரையுலக நடிகைகள் மீது அவதூறு பரப்பும் விதத்தில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட AV ராஜு பேசிய நிலையில், இதுகுறித்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், ஏவி ராஜுவை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஆர்.கே.செல்வமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, "இன்றைய சமூக வலைதளங்களில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்ட ஏவி ராஜு என்பவர் திரை துறையை குறித்து சில தரமற்ற, அவதூறுகளை கூறியிருக்கிறார். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நடந்த போட்டியில், 2017ல் கூவத்தூரில் நடந்ததாக பிரபல நடிகையை
சம்மந்தப்படுத்தி ஒரு அவதூறை கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாது பல நடிகைகள் என்று பலரையும், நடிகர் கருணாஸ் அவர்களையும் சம்பந்தப்படுத்தி இந்த கீழ்த்தனமான செய்தியை வெளியிட்டுள்ளார்.
அரசியலில் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வதற்கு, அவர்களுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் உங்கள் அரசியல் பிரச்சனையில் தேவையில்லாமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கிழித்தனமான அவதூறுகளை திரையுலக பெண்கள் மீது சுமத்தாதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இத்தகைய அநாகரிகமான, கீழ்த்தனமான செயலை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறோம்.
பஞ்சாயத்து தலைவரிலிருந்து, சட்டமன்ற உறுப்பினர் முதல், பாரத குடியரசின் தலைவராக முர்மு அவர்கள் வரை ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற இந்த பாரத தேசத்தில் பெண்கள் மீதும், அவர்களின் பெண்மை மீதும் நடத்துகின்ற இம்மாதிரியான அவதூறு தாக்குதலை இரும்பு கரம் கொண்டு களைய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுக்கு பணிவன்புடன் வேண்டுகோள் விடுகிறோம். நன்றி என தலைவர் ஆர் கே செல்வமணி மற்றும் பொதுச் செயலாளர் சுவாமிநாதன் ஆகியோர் இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.