
கமலஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் வருகிற ஜூன் 5-ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் புரமோஷன் பணிகள் திவிரமாக நடைபெற்று வந்த நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமலஹாசன், சிறப்பு விருந்தினராக வந்திருந்த கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரை பார்த்து “தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்” எனக் கூறியிருந்தார். இது கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தொடங்கி, கர்நாடக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கமலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் ‘தக் லைஃப்' படத்தை கர்நாடகாவில் வெளியிட விடமாட்டோம் என கன்னட அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன. ஆனால் தான் கூறிய கருத்துக்கு ஒருபோதும் மன்னிப்பு கேட்க போவதில்லை என்றும், மொழியியல் அறிஞர்கள் எனக்கு கற்பித்ததைத்தான் நான் பேசினேன் என்றும், மொழி குறித்து பேச அரசியல்வாதிகளுக்கு அருகதை இல்லை எனவே இந்த பிரச்சனையை மொழி வல்லுனர்களிடம் விட்டுவிடலாம் என கமல் கூறி இருந்தார்.
கர்நாடக திரைப்பட வர்த்தக சம்மேளனம் முடிவு
இந்த விவகாரம் குறித்து கர்நாடக திரைப்பட வர்த்தக சம்மேளன தலைவர் நரசிம்மலு கூறியதாவது, “பல கன்னட அமைப்புகள் கமலஹாசன் படத்தை தடை செய்யக்கோரி கோரிக்கை வைத்துள்ளனர். கமல் மீது எங்களுக்கு எந்த அனுதாபமும் இல்லை. அவர் தவறு செய்ததை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். அவரை சந்தித்து பேசவும் முயற்சிக்கிறோம். இன்று அல்லது நாளைக்குள் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்கவில்லை என்றால் கன்னட அமைப்புகளுக்கு ஆதரவு கொடுத்து, ‘தக் லைஃப்’ படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம்" எனக் கூறினார்.
கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ படத்திற்குத் தடை
இந்த நிலையில் கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ படத்தின் ரிலீசுக்கு தடை விதிப்பதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கமல் தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் கர்நாடகாவில் ஜூன் 5-ம் தேதி ‘தக் லைப்’ படம் வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் பேசிய கர்நாடக பிலிம் சேம்பர் உறுப்பினர் சா ரா கோவிந்த் தக் ‘லைஃப்’ படத்திற்கான தடையை உறுதி செய்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.