விமர்சனம் ‘திமிரு புடிச்சவன்’... கண்டு சலித்த கள்ளன் - போலீஸ் ஆட்டம்

By sathish kFirst Published Nov 17, 2018, 2:18 PM IST
Highlights

‘தங்கப் பதக்கம்’,‘வால்டர் வெற்றிவேல்’ வகையறா செண்டிமெண்ட் ஒன்றைக் கையில் எடுத்துக்கொண்டு தமிழ்சினிமாவின் 8657 வது போலிஸ் படமாக களம் இறங்கியிருக்கிறான் விஜய் ஆண்டனியின் ‘திமிரு புடிச்சவன்’.


‘தங்கப் பதக்கம்’,‘வால்டர் வெற்றிவேல்’ வகையறா செண்டிமெண்ட் ஒன்றைக் கையில் எடுத்துக்கொண்டு தமிழ்சினிமாவின் 8657 வது போலிஸ் படமாக களம் இறங்கியிருக்கிறான் விஜய் ஆண்டனியின் ‘திமிரு புடிச்சவன்’.

ஒரு போலீஸ் கதையில் என்னவெல்லாம் இருக்கவேண்டுமோ அவ்வளவும் கொண்ட ஒரு கதை இது என்று சுருக்கமாக முடித்தாலும் தப்பில்லைதான். ஆனால் விஜய் ஆண்டனி வளர்ந்துவரும் நடிகர். மற்ற மசாலா நடிகர்களோடு ஒப்பிடுகையில் கொஞ்சம் கதைக்காக மெனக்கெடுபவர் என்பதால் கதை என்ற ஒன்று இருக்கிறதா என்று தேடிப்பார்ப்போம்.

தாய் தந்தையற்ற அனாதையான விஜய் ஆண்டனி ப்ளஸ் டூ வரை மட்டுமே படித்ததால் கான்ஸ்டபிள் ஆகமட்டுமே முடிகிறது. தன்னைப் போல தன் தம்பியும் ஆகக்கூடாது, எஸ்.ஐ.  அளவுக்காவது உயர் அதிகாரி ஆக வேண்டும் என்று அவருக்குப் பயிற்சி கொடுக்கிறார். ஆனால், அது அவரது தம்பிக்குப் பிடிக்கவில்லை. இதனால் ஊரை விட்டே ஓடுகிறார். சில வருடங்களுக்குப் பிறகு எஸ்.ஐ. ஆக சென்னைக்கு மாற்றலாகி வருகிறார் விஜய் ஆண்டனி. அங்கு தன் தம்பி  ரவுடியாகி, கொலைக் குற்றங்களைப் புரிவதைக் கண்கூடாகப் பார்க்கிறார். கோடம்பாக்க இ.பி.கோ.வின் படி மிக நேர்மையான போலீஸ் அதிகாரி என்னசெய்யவேண்டுமோ அதன்படி தன் தம்பியை சுட்டுக்கொல்கிறார்.

ஒரு கட்டத்தில் இதற்கெல்லாம் மூளையாகச் செயல்படும் சாய் தீனாவின் நெட்வொர்க் விஜய் ஆண்டனிக்குத் தெரிய வர, 18 வயதுக்குட்பட்ட இளம் சிறார்களைத் திசை திருப்பி அவர்களை சாய் தீனா மைனர் குற்றவாளிகளாக உருவாக்குதை அறிந்துகொள்கிறார். அவர்கள் கொலை செய்தாலும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதால் விரைவில் சிறையில் இருந்து வெளியே வந்துவிட முடியும் என்று தீனா மூளைச் சலவை செய்து நிறைய பேரை தன் கட்டுக்குள் வைத்திருப்பதைப் பார்க்கிறார். அதனால் தீனாவின் சாம்ராஜ்ஜியத்தை அழிக்க வேண்டுமானால் சிறார்களின் மனம் மாற வேண்டும். அதற்கு தீனாவை அவமானப்படுத்தி போலீஸ் தான் கெத்து, ரவுடிகள் எல்லாம் வெத்து என்பதை நிரூபிக்க வேண்டும் என்று முயற்சிகள் எடுக்கிறார். தனது ஷூ லேஷை கட்டச்சொல்லி யூடுபில் அப்லோடு பண்ணி தீனாவை அவமானப்படுத்துகிறார்.

அடுத்து கதையில் கொஞ்ச நேரத்துக்கு கள்ளன் - போலீஸ் ஆட்டம் நடக்க க்ளைமேக்ஸில் நல்லது வென்றே தீரும் என்று முடித்திருக்கிறார்கள். கதையில் புதிய சீன்கள் என்று எதுவுமே இல்லாததால் நடக்கப்போகிற ஒவ்வொரு காட்சியையும் 18 வயதுக்கு உட்பட்டவர்களே கூட யூகித்துவிட முடிகிறது என்பது மிகப்பெரிய பலவீனம்.

தன்னிடம் இருக்கும் நடிப்புத்திறன் அவ்வளவையும் ‘பிச்சைக்காரன்’ படத்தில் மொத்தமாக வழங்கிவிட்டு வெறுங்கையோடு நிற்கிறாரோ என்று விஜய் ஆண்டனி குறித்து அஞ்சும் அதே வேளை, காமெடி கலந்த காதலுடன் நெஞ்சில் பால்வார்க்கிறார் நாயகி நிவேதா பெத்துராஜ். அதிலும் குறிப்பாக மருத்துவமனையில் வி.ஆ, நி.பெ.வின் காதலுக்கு ஓ.கே சொன்னவுடன் கூலிங் கிளாஸை மாட்டிக்கொண்டு ‘கண்ணு கலங்குது சார்’ என்பதும் மொட்டை மாடிக்குப் போய் வெடித்து அழுவதும் செம கெத்துராஜ். போலீஸ் உடையில் அவ்வளவு எடுப்பாக இருக்கிறார் என்பதையும் சபலபுத்தியுடன் குறிப்பிட்டே ஆகவேண்டியிருக்கிறது.

இயக்குநர் கணேஷா ரிஸ்க் எதுவும் எடுக்காமல் ரஸ்க் சாப்பிட நினைத்திருக்கிறார் என்பது படம் முழுக்கவே தெரிகிறது. விஜய் ஆண்டனியின் இசையில் ‘திமிருதான் புடிச்சவன்... திமிருக்கே புடிச்சவன்’ பாடல் செம டெம்போ.

இதுபோன்ற சுமாரான படங்களில் தொடர்ந்தால் மீண்டும் டியூன் போட்டுப் பொழைக்கவேண்டிய நிலைக்கு விஜய் ஆண்டனி வரவேண்டியிருக்கும் என்று தோன்றுகிறது.

click me!