72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது..!

By manimegalai aFirst Published Sep 26, 2020, 12:33 PM IST
Highlights

எஸ்.பி. பி உடல் இறுதி சடங்குகளுக்கு பின், 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
 

எஸ்.பி. பி உடல் இறுதி சடங்குகளுக்கு பின், 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் 5ம் தேதி சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த மாதம் 13ம் தேதி அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. அதன் பிறகு தேறி வந்த அவருக்கு கடந்த செப்டம்பர் 4ம் தேதி மீண்டும் பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று நெகட்டிவ் என வந்தது. இதனை அவருடைய மகன், சரண் ரசிகர்களிடம் சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்தார்.

மெல்ல மெல்ல நன்கு உடல் நலம் தேறி வந்த எஸ்.பி.பி உடல் நிலை திடீர் என செப்டம்பர் 24 ஆம் தேதியன்று, மீண்டும் மிகவும் மோசமடைத்ததாக மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிட்டு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மதியம் 1.04 மணிக்கு அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார் என தெரிவித்தனர். 

இந்நிலையில் நேற்று எஸ்.பி.பி-யின் உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அதனைத்தொடர்ந்து அவருடைய உடல் நேற்றே தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. தாமரைப்பாக்கம் பண்ணை வீடு முழுவதும் திருவள்ளூர் மாவட்ட காவல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.2 கி.மீ. முன்பாகவே தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் வாகன தணிக்கை செய்து வாகனங்களை அனுப்பி வருகின்றனர். பாதுகாப்புக்காக 4 டிஎஸ்பிகள் உள்ளிட்ட 500 போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 7 மணி முதலே பொதுமக்கள், திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் ஆகியோர் எஸ்.பி.பி.யின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். எஸ்.பி.பி போலவே குரல் வளம் கொண்ட, பாடகர் மனோ, இவருடைய உடலை பார்த்து கதறி அழுது அஞ்சலி செலுத்தினார். மேலும் தொடர்ந்து தொடர்ந்து பல பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதை தொடர்ந்து எஸ்.பி.பி உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்ற பின்னர். அவருடைய உடல் சரியாக 12:30 மணி அளவில், 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
.


 

click me!