மாயம் நிறைந்த குரலுக்கு மரியாதை... எஸ்.பி.பி.,யை கைகூப்பி வரவேற்றுக் கொண்ட காற்று மண்டலம்..!

By Thiraviaraj RMFirst Published Sep 26, 2020, 11:52 AM IST
Highlights

ஆம்... எஸ்.பி.பி இசையில் தொலைந்தார், கரைந்தார், தோய்ந்தார்... இப்போது மறைந்தார்...  விண்ணிலே பாதை இல்லை! உன்னை தொட ஏணி இல்லை...

கலைஞர்களுக்கு மரணமில்லை எனினும் மனம் கனக்கவே செய்கிறது. மொத்த இசை உலகுமும் குலுங்கி அழுகிறது. கண்களை மூடிக்கொண்டார் எஸ்.பி.பி.  ஒரு சாதனை தன் உச்சத்தைத் தொட்டு விடை பெற்றுவிட்டது. இந்தியத் திரையுலகம் தன் அடையாளங்களில் ஒன்றை இழந்து விட்டது. அப்துல் கலாம் ஐயா இறந்தபோது ஒவ்வொரு தமிழனும் தன் வீட்டில் ஒருவர் மறைந்ததுபோல துக்கப்பட்டானோ, ஒவ்வொரு இந்தியனும் கண்ணீர் விட்டானோ அதே போல் இன்று எஸ்.பி.பி.யின் மறைவு கனத்த இதயங்களையும் கரைய வைத்துக் கொண்டிருக்கிறது. 

ஒருவராலும் வெறுக்கப்படாமல் அனைவருக்கும் பிடித்தவராக வாழ்வது மாபெரும் வரம். அப்படிப்பட்டவராக காற்றில் கரைந்தவர் அப்துல் கலாம். காற்றாய் வாழப்போகிறவர் எஸ்.பி.பி. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே  கோணேட்டம்பேட்டை கிராமத்தில்  தெலுங்கு பிராமணர் குடும்பத்தில்  சாம்பாமூர்த்தி-சகுந்தலம்மாள் தம்பதியரின் 6 குழந்தைகளில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஒருவர். 

பின்னணி பாடகராக  வாழ்க்கை பயணத்தை தொடங்கி 16 மொழிகளில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி பாடும் நிலாவாக ஜொலித்தவர். அவர் குரலில் ஒலிக்கும் கருணை உள்ளத்திலும் பிரதிபலிக்கும். சொந்த கிராமமக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் சொந்த பணத்திலிருந்து அமைத்து தண்ணீர் தாகம் தீர்த்தவர். பள்ளிக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்து பண்புள்ளத்தை பறைசாற்றியவர். 

எஸ்.பி.பி. இறப்பால் ஒட்டுமொத்த இந்தியாவும் கலங்கித் தவிக்கிறது. குடியரசுத் தலைவர் முதல் கடைகோடி ரசிகன் வரை சோகத்தை பல பாடல்கள் மூலம் பகிர்ந்து கண்ணீரால் கரைகிறார்கள். எஸ்.பி.பி.,க்கு ஏன் அரச மரியாதை என்று கேள்வி எழுகின்றன. திரைத்துறையைச் சேர்ந்த சிவாஜி கணேசனுக்கு அடுத்து அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறதென்றால் அது எஸ்.பி.பிக்கு மட்டுமே. 

எஸ்.பி.பி.,க்கு ஏன் அரச மரியாதை கொடுக்க வேண்டும்..? இசையை சிறகுகளாய் விரித்து கொண்டு ஒரு கடைநிலை பாமரன், ஆகாயம் வரையும் சென்று வர முடியும். அந்த ஆகாய அனுபவத்தை சாத்தியமாக்கியது ஆயிரம் நிலா எஸ்.பி.பி யின் குரல். நிலவின் குளுமை, நிலவின் வெளிச்சம், நிலவு தரும் இதம், நிலவின் இல்லாமை என நிலாவின் அனைத்து பண்புகளையும் கொண்ட ரசமான குரல் எஸ்.பி.பியின் குரல்.

ஆயிரம் நிலவே வா… என தொடங்கிய பயணம், நாற்பத்தைந்தாயிரம் பாடல்கள், 16 மொழிகள், கின்னஸ் சாதனைகள், 6 தேசிய விருதுகள், பத்மஸ்ரீ, பத்மபூசன் விருதுகள் எனக் கடந்து படைத்த சரித்திரம். எஸ்.பி.பி  நம்மை விட்டு நிரந்தரமாக நீங்கி சென்ற போது, மொத்த இசை உலகமும் உடைந்த அழுதது. அவர் பாடல்களாலே அவருக்கான அஞ்சலியில் இணையம் கலங்கியது.  சமூக வளைதளங்களின் மூலம் எஸ்.பி.பியின் மீதான பிரியத்தை, அவரை இழந்த வருத்தத்தை, அவர் விட்டுச் சென்ற நினைவுகளை மீட்டு மீட்டு உருகி மருகுகின்றனர் கோடானகோடி ரசிகர்கள். எஸ்.பி.பி என்கிற ஆளுமை வெறும் பாடகராக மட்டுமின்றி முழுமையான மனிதராக இருந்தார். அந்த மனிதமும், எளிமையும், புகழின் உச்சத்தில் இருந்த போதும் வயது பேதமின்றி அவர் பகிர்ந்த அன்பும் அவர் குரலோடு தனித்து ஒலிக்கும் பண்புகள். 

எஸ்.பி.பி.,யின் குரலுக்கு பின் இசையோடு சேர்த்து கண்ணீரையும் கசிய விட்ட அந்த மாயம் நிறைந்த குரல் ஒவ்வொரு ரசிகனின் நெஞ்சத்தை உருக்கும். துக்கத்தில் உடைவதும், வெற்றியில் திளைப்பதும், கம்பீரத்தில் கர்ஜிப்பதும், காதலில் தொலைவதும், அன்பில் கரைவதும் ஒற்றை குரலில் சாத்தியமா? என்றால் அதனை நிரூபித்துக் காட்டியது எஸ்.பி.பியின் குரல். இன்று அவருக்காக வருந்தும் ஒவ்வொரு ரசிகனும் சொல்லும் வார்த்தை, இனி நான் என் பயணத்தில் என்ன செய்வேன்?

 

ஒரு கலைஞனின் முழுமை என்பது, அந்த கலையில் கரைவதிலும், தொலைவதிலும், அந்த கலையில் தோய்ந்து, உய்த்து படைப்பதிலும் இருக்கிறது எனில், ஆம்... எஸ்.பி.பி இசையில் தொலைந்தார், கரைந்தார், தோய்ந்தார்... இப்போது மறைந்தார்...  விண்ணிலே பாதை இல்லை! உன்னை தொட ஏணி இல்லை... உன் தேகம் மறைந்தாலும் இந்த மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே... காற்று மண்டலமே உங்களைக் கைகூப்பித் தொழும்... போய்வாருங்கள்  எஸ்.பி.பி., சார்..!


 

click me!