‘தலைவி படத்திற்கு தடை கோர ஜெ. தீபாவுக்கு உரிமையில்லை’... நீதிமன்றத்தில் இயக்குநர் ஏ.எல்.விஜய் திட்டவட்டம்..!

By Kanimozhi PannerselvamFirst Published Feb 9, 2021, 3:58 PM IST
Highlights

“தலைவி” என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டே  படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு தீபாவிடம் ஒப்புதல் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஏ.எல். விஜய் தரப்பில் தெரிவித்தார். 

மறைந்த நடிகை ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய குயின் வெப் சீரிஸ் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் ரம்யா கிருஷ்ணன், சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தமிழில் தலைவி என்ற பெயரில் இயக்குநர் ஏ.எல்.விஜய்யும், இந்தியில் ஜெயா  என்ற பெயரில் ஐதராபாத்தைச் சேர்ந்த விஷ்ணுவர்தன் என்பவரும் படமாக எடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்கள், வெப் சீரிஸுக்கு தடை விதிக்க கோரி, ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு மீதான இன்றைய விசாரணையின் போது, நீதிபதி சுப்பையா அமர்வு முன்பு இயக்குநர்கள் ஏ.எல்.விஜய், விஷ்ணுவர்தன் தரப்பிலான வழக்கறிஞர்கள் ஆஜராகினர். 

“தலைவி” என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டே  படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு தீபாவிடம் ஒப்புதல் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஏ.எல். விஜய் தரப்பில் தெரிவித்தார். மேலும், பொதுத் தளங்களில் வெளியான தகவலின் அடிப்படையிலேயே இந்த கதை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயலிதாவை நல்ல முறையிலேயே சித்தரித்து உள்ளதாகவும் எதிர்கால சந்ததியினர் அவரைப் பற்றி தெரிந்துகொள்ளும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார். இந்த படத்திற்கு தடை கேட்க தீபாவுக்கு எந்த ஒரு உரிமையும் கிடையாது என்றும் குறிப்பிட்டார்.

தீபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், படத்தை வெளியிடுவதற்கு முன்பு தங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் . இயக்குனர் விஜய் தரப்பு வழக்கறிஞர், படத்தை சென்சார் போர்டு பார்த்து தணிக்கை செய்யும் என்று தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
 

click me!