ஃபெப்சி தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய அஜித்... ரூ.10 லட்சம் நிதி உதவி...!

By Kanimozhi PannerselvamFirst Published May 15, 2021, 1:58 PM IST
Highlights

இதனால் திரைப்பட தொழிலாளர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்காக ஃபெப்சி யூனியனுக்கு ரூ.10 லட்சம் கொடுத்திருக்கிறார் நடிகர் அஜித். 

கொரோனா தொற்றால் தமிழ் திரையுலகம் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு பல மாதங்கள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஃபெப்சி தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களையும், லட்சக்கணக்கில் நிதி உதவியும் வழங்கினர். அதன் மூலம் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு ஒரளவு உதவி புரிய முடிந்தது. 

கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்கள் வந்து சில மாதங்கள் கடந்த பிறகு தான் ரஜினி, அஜித், விஜய், சிம்பு, தனுஷ் போன்ற டாப் ஸ்டார்களின் பட ஷூட்டிங் தொடங்கியது. இதனால் ஃபெப்சி தொழிலாளர்களுக்கும் வேலை கிடைத்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இதனால் திரைப்பட தொழிலாளர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்காக ஃபெப்சி யூனியனுக்கு ரூ.10 லட்சம் கொடுத்திருக்கிறார் நடிகர் அஜித். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி இதனை தெரிவித்துள்ளார். மேலும் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் நிதி உதவி அளிப்பதை விட ஓடிடியில் வெளியிடும் அளவிற்கு படம் அல்லது வெப்சீரிஸில் நடிக்க தேதிகளை ஒதுக்கிக் கொடுத்தால், அதன் மூலம் கிடைக்கும் தொகை ஃபெப்சி தொழிலாளர்களை காக்க உதவும் என உருக்கமான கோரிக்கையும் முன்வைத்துள்ளார். நடிகர் அஜித் இன்று தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர் சங்கத்துக்கு 2.50 லட்சம் ரூபாயும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!