தமிழ் படங்களில் நடித்து பிரபலமான காமெடி நடிகை வாசுகி கஷ்டப்படுவது அறிந்ததும் தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, நாக பாபு, மஞ்சு விஷ்ணு ஆகியோர் உதவி உள்ளனர்.
சினிமாக்காரர்களின் வாழ்க்கை எல்லா நாட்களும் ஒரே மாதிரி இருக்காது. இதன்மூலம் கோடி கோடியாக சம்பாதித்தவர்களும் உண்டு. வறுமையில் வாடுபவர்களும் உண்டு. பல்வேறு நட்சத்திரங்களுடன் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தவர்கள் கூட தற்போது பணமின்றி கஷ்டப்படுவதையும் பார்க்க முடிகிறது. அப்படி சினிமாவில் பாபுலராக இருந்து தற்போது வறுமையில் வாடுபவர் தான் நடிகை வாசுகி. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் 150 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் இவர், தற்போது சாப்பாடு கூட கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்.
சமீபத்தில் யூடியூப் சேனல் மூலம் தன் கஷ்டத்தை வெளிப்படுத்தினார் வாசுகி. தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலரிடம் உதவி கேட்டும் யாரும் உதவ முன்வரவில்லை என்று மிகவும் வருத்தத்துடன் தெரிவித்திருந்தார் வாசுகி. அவரின் இந்த பரிதாப நிலை குறித்து அறிந்த உடன் தெலுங்கு நடிகர்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். மெகாஸ்டார் சிரஞ்சீவி மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் நாகபாபு ஆகியோர் தலா ஒரு லட்சம் ரூபாய் அளித்து அவருக்கு உதவி இருக்கிறார்கள்.
இதையும் படியுங்கள்... கோமாளி கதை திருட்டுக்கு பஞ்சாயத்து பண்ணிய பார்த்திபனை ‘லவ் டுடே’வில் பழிவாங்கிய பிரதீப் - வெளியான பகீர் தகவல்
இதையடுத்து பிரபல தெலுங்கு ஹீரோ மஞ்சு விஷ்ணுவும் நடிகை வாசுகிக்கு உதவ முன்வந்துள்ளார். மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன் தலைவராக இருக்கும் மஞ்சு விஷ்ணு, தனது சொந்த செலவில் மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன் கார்டு வழங்கி உள்ளார். இதன்மூலம் அவருக்கு பணம் உதவி கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார் மஞ்சு விஷ்ணு. இந்த தகவலை நடிகை கராத்தே கல்யாணி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு மஞ்சு விஷ்ணுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி நடிகை வாசுகியிடம் போனில் பேசியுள்ள நாகபாபு, தற்போது தான் அமெரிக்காவில் இருப்பதாகவும், இந்தியாவிற்கு வந்ததும் மேற்கொண்டு உதவிகள் செய்வதாகவும் உறுதியளித்திருக்கிறாராம். பணமின்றி தவித்து வரும் தமிழ் நடிகைக்கு ஆதரவு அளித்த டோலிவுட் நடிகர்களின் நல்ல உள்ளத்தை பாராட்டி வரும் நெட்டிசன்கள், மறுபுறம் அவருக்கு உதவ முன்வராத தமிழ் நடிகர்களை திட்டித்தீர்த்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... படம் பிளாப்... சம்பளம் கொடுக்க பணமின்றி தவித்த தயாரிப்பாளர்... ‘உன் வீட்டைக் கொடு’னு எழுதி வாங்கிய விஜயகாந்த்