“மற்ற மாநிலங்களைப் போல்”... தமிழக முதல்வருக்கு தயாரிப்பாளர்கள் வைத்த கோரிக்கை...!

By Kanimozhi PannerselvamFirst Published Dec 21, 2020, 2:30 PM IST
Highlights

இதைக் கருத்தில் கொண்டு எவ்வாறு ஆந்திர அரசும் தெலுங்கானா அரசும் பல்வேறு நலத்திட்டச் சலுகைகளை வழங்கியது போல் தமிழக அரசும் பல்வேறு சூழ்நிலைகளில் தமிழக திரைப்படத்துறைக்குப் பக்கபலமாக இருந்து பல்வேறு உதவிகளைச் செய்துள்ளது.

கொரோனா காலத்தில் திரையுலகம் சந்தித்த இன்னல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. தற்போது கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன. ரஜினி, அஜித் என உச்ச நட்சத்திரங்களில் ஆரம்பித்து பலரும் படப்பிடிப்புகளில் தீவிரமாக பங்கேற்றுள்ளனர். இருந்தாலும் சினிமாவை கொண்டாடும் மற்றொரு இடமான திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், என்னதான் படங்களை வேகமாக ரிலீஸ் செய்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் அள்ளாடும் நிலையில் தயாரிப்பாளர்கள் உள்ளனர். அதுமட்டுமின்றி VPF கட்டணம் தொடர்பாக தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் இடையே வெடித்துள்ள பிரச்சனைகள் வேறு திரையுலகையே சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. 

இதனிடையே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் தமிழக முதலமைச்சரிடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இதுகுறித்து வெளியான அறிக்கையில், அண்டை மாநிலங்களான தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்தில் கலைத்துறை மற்றும் திரைத்துறை தற்போது சந்தித்து வரும் இன்னல்களைக் கருத்தில் கொண்டு சிறப்பான பல திட்டங்களை அறிவித்துள்ளது, சினிமா மறுவாழ்வு பெறுவதற்காக Restart package to film industry என்ற ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது, அந்த திட்டம் அந்த மாநிலத்தில் பல்வேறு வகையில் திரைத்துறை மற்றும் கலைத்துறை பொலிவு பெறும் வகையில் உள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் திரைப்படத்துறை அதலபாதாளத்தில் சிக்கிப் பல இன்னல்களைச் சந்தித்து வருகிறது

இதைக் கருத்தில் கொண்டு எவ்வாறு ஆந்திர அரசும் தெலுங்கானா அரசும் பல்வேறு நலத்திட்டச் சலுகைகளை வழங்கியது போல் தமிழக அரசும் பல்வேறு சூழ்நிலைகளில் தமிழக திரைப்படத்துறைக்குப் பக்கபலமாக இருந்து பல்வேறு உதவிகளைச் செய்துள்ளது. அதனை யாரும் மறுக்க முடியாது. அதே வேளையில் இதுபோன்ற இந்த பேரிடர் காலகட்டத்தில் பல இன்னல்கள் சந்தித்து வருவது அனைவரும் அறிந்ததே. ஆகையால் தயவு கூர்ந்து இதனைக் கருத்தில்கொண்டு அண்டை மாநிலங்கள் வழங்கிய திட்டங்களை விட குறிப்பாக LBT (Local Body Tax) முழுமையாக ரத்து செய்தல் போன்ற சிறப்பான சலுகைகளை. தமிழ் திரைப்படத்துறைக்கு வழங்கி, வாழ்வில் புதுப் பொலிவடைய வழிவகை செய்யுமாறு தமிழ் திரைத்துறை சார்பாக அன்புடன் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளனர். 
 

click me!