எல்லை மீறிப்போகும் தனுஷ்...  ரஜினி செய்தது எப்படி நியாயமாகும்? செம்ம கடுப்பில் விஷால் அன்ட் கோ...

First Published Mar 22, 2018, 5:14 PM IST
Highlights
Tamil Film Producers Council angry against Rajinikanth and dhanush dhanush


ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திட்டமிட்டபடி ஏப்ரல் இறுதியில் ரிலீஸ் செய்யப்படும் என தனுஷ் தரப்பிலிருந்து  அறிவிக்கப்பட்டது திரையுலகைச் சேர்ந்த அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

தமிழ் சினிமாவில் கடந்த நான்கு வாரங்களாக புதிய படங்கள் ரிலீஸ் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மார்ச் 16முதல் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டு வேலை நிறுத்தம் நடைபெற்றுவருகிறது. இதனால் மார்ச் மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்த 30க்கும் மேற்பட்ட படங்கள் முடங்கியுள்ளன. வேலை நிறுத்தம் முடிந்த பின் ஏற்கெனவே நிறுத்திவைக்கப்பட்ட படங்கள் ரிலீஸ் செய்த பின்னரே பிற படங்கள் வெளியிட அனுமதிக்கப்படும் எனச் சங்க நிர்வாகிகள் தயாரிப்பாளர்களுக்கு உறுதி அளித்திருந்தனர்.

இதனால் புதிய படங்கள் தணிக்கைச் சான்றிதழ் பெறத் தடையில்லாச் சான்று, விளம்பர ஒப்புதல் கடிதம் இரண்டும் வழங்குவதைத் தயாரிப்பாளர்கள் சங்கம்நிறுத்தி வைத்திருந்தனர். இந்நிலையில், ஏப்ரல் 27 அன்று ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டிருந்த ரஜினி நடித்திருக்கும் காலா படத்துக்கு இச்சான்றிதழ் வழங்கத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடர்ந்து மறுத்துவந்தது.

இமயமலையில் ஆன்மிகப் பயணம் முடிந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் வேலைநிறுத்தத்தில் தனக்கு உடன்பாடில்லை என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு அளித்திருந்த பேட்டியொன்றில் கூறியிருந்தார்.  தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம் இரண்டிலும் உறுப்பினராக உள்ள ரஜினிகாந்த் சங்க முடிவுக்கு எதிராகப் பொது வெளியில் கருத்து தெரிவித்தது திரைத் துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினிகாந்த் நடித்து வெளியாகி வசூல் ரீதியாக தோல்வியான படங்களான பாபா, குசேலன், லிங்கா படங்கள் நஷ்டம் என விநியோகஸ்தர்கள் பிரச்சனையில் இறங்கிய சமயத்தில் அப்பிரச்சினைகளைச் சுமுகமாகத் தீர்த்து வைத்தது தயாரிப்பாளர்கள் சங்கம். தனக்குப் பிரச்சினை ஏற்பட்டபோது சங்கத்தின் உதவியை நாடிய ரஜினி தரப்பு தற்போது தனது சுயநலனுக்காகச் சங்க முடிவை விமர்சிப்பது அராஜகமானது என சிறு படத் தயாரிப்பாளர்கள் புலம்பி வருகின்றனர்.

சங்கப் பொதுக் குழுவிலும், பொது வெளியிலும் தயாரிப்பாளர்கள் சங்க முடிவுகளை விமர்சித்துப் பேசியதற்காக 30க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைச் சங்கத்திலிருந்து நிர்வாகக் குழு சஸ்பெண்ட் செய்திருக்கிறது. அதே போன்று ரஜினிகாந்த் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையில் ரஜினி, தனுஷ் இருவரும் உறுப்பினர்களாக இருப்பதால் “காலா” படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கத் தேவையான அனுமதிக் கடிதங்கள் வர்த்தக சபையிலிருந்து நேற்றே தனுஷ் நிறுவனத்தின் பெயரில் வாங்கியிருக்கிறார். இது தயாரிப்பாளர் சங்க விதியை மீறி நடந்த செயலாகும் என பேசி வருகிறார்களாம்.

“காலா” படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் செய்யத் தொடங்கியுள்ளது தயாரிப்பு தரப்பு. இதனால் ஏப்ரல் இறுதியில் திட்டமிட்டபடி காலா ரிலீஸ் ஆகும் எனக் கூறப்படுகிறது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்திவரும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க போராட்டத்திற்கு எதிராக ரஜினிகாந்த் ஈடுபடத் தொடங்கியுள்ளதன் அடையாளமாகவே என்றே இந்தச் செயல் பார்க்கப்படுகிறது. சங்க ஒற்றுமை, திரைத் துறை வளர்ச்சி, தயாரிப்பாளர்கள் நலன் என்பதைவிடத் தனது நலன் மட்டுமே முக்கியம் என ரஜினிகாந்த் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார்  என தயாரிப்பாளர்கள் புலம்புகிறார்கள்.

click me!